தீ விபத்தில் ₹2 லட்சம் பொருட்கள் எரிந்து சாம்பல்

காலாப்பட்டு, ஆக. 8:   காலாப்பட்டு அருகே சாமி ஊர்வலத்தில் பட்டாசு வெடித்தபோது கூரை வீடு தீப்பிடித்து  ரூ.2 லட்சம் பொருட்கள் சாம்பலானது.  புதுச்சேரி காலாப்பட்டு அடுத்த தமிழக பகுதியான தந்திராயன்குப்பத்தில் மாரியம்மன் கோயில் திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி இரவில் சுவாமி வீதி உலாவின்போது பட்டாசு வெடித்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக தீப்பொறி பரவி அதே பகுதியை சேர்ந்த மீனவர் உத்திரகுமார் (38) என்பவர் வீட்டின் கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது. தீ மளமளவென பரவியதால் வீட்டில் இருந்தவர்கள் வெளியே ஓடி உயிர் தப்பினர். தகவல் அறிந்ததும் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைக்க முயன்றனர. ஆனால் முடியவில்லை. இதையடுத்து காலாப்பட்டு தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த நகை, பணம், வீட்டு உபயோக பொருட்கள் என ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. இது குறித்து மீனவர் உத்திரகுமார் அளித்த புகாரின்பேரில் கோட்டக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்து காரணமாக தந்திராயன்குப்பம் பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: