வேலூர் மாவட்டத்தில் இன்று 11 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் 11 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வினியோகம் செய்யும் பணி இன்று வழங்கப்படுகிறது. மத்திய அரசின் தேசிய ஊரக சுகாதாரத் துறை சார்பில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் தேசிய குடற்புழு ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. நாடு முழுவதும் அங்கன்வாடி மையங்களில் 1 முதல் 5 வயது குழந்தைகளுக்கும், அரசு பள்ளிகள், நிதியுதவி, தனியார் பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 19 வயது உள்ள அனைவருக்கும் இன்று குடற்புழு நீக்க மாத்திரை அல்பெண்டசோல் வழங்கப்படுகிறது.

அதன்படி, வேலூர் மாவட்டத்தில் 1 முதல் 19 வயதுக்குட்பட்ட 11 லட்சத்து 11 ஆயிரத்து 423 பேருக்கு குடற்புழு மாத்திரை வழங்க வேலூர் மாவட்ட சுகாதார பணிகள் துறை சார்பில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகள் மற்றும் வீடுகள் தோறும் நேரடியாக கிராம செவிலியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மாத்திரைகளை வினியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதார பணிகள் துணை இயக்குனர் சுரேஷ் கூறியதாவது: வேலூர் மாவட்டத்தில் உள்ள 2,996 அங்கன்வாடி மையங்களும், 2,521 அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகள், 538 தனியார் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இன்று அவர்களின் இடத்திற்கே கொண்டு வழங்கப்படுகிறது. இந்த மாத்திரை மூலம் குடல் புழுக்களை கட்டுப்படுத்துதல், ஊட்டச்சத்து குறைபாடுகளை சரிசெய்தல், மன அழுத்தம், இரும்புச்சத்து குறைபாடு போன்ற பல்வேறு நோய்களுக்கு ஆளாகும் குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு நோய்கள் வரும் முன்பே தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இந்த மாத்திரை 400 மில்லி கிராம் கொண்டது. பள்ளிகள், வீடுகள்தோறும் நேரடியாக கிராம செவிலியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உட்பட 9 ஆயிரத்து 816 பேர் பணியாற்றுகின்றனர். இந்த மாத்திரை சாப்பிடுவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. இதை கண்டிப்பாக மாணவ, மாணவிகள் உட்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: