குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல் செந்துறையில் முந்திரி ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும்

அரியலூர், ஜூலை 26: அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் வினய் தலைமை வகித்தார். கூட்டத்தில் விவசாயிகளின் விவாதம் வருமாறு:தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க தலைவர் விசுவநாதன்: மழைக்கு முன்பு மாவட்டத்தில் உள்ள ஏரி,குளங்களை தூர்வார வேண்டும். செந்துறையில் முந்திரி ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். முந்திரியை பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்க்க வேண்டும். நெல், உளுந்து, கரும்பு, மக்காச்சோளம், பருத்தி இவைகளுக்கு காப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்ககூடாது. பெரியநாவலூர் பெரிய ஏரியை தூர்வார ராம்கோ சிமென்ட் ஆலைக்கு உத்தரவிட வேண்டும்.அரியலூர் மாவட்ட விவசாயிகள் சங்கத்தலைவர் செங்கமுத்து: ஏரி, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பள்ளி நேரங்களில் கனரக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்க வேண்டும். கனரக வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும். அரியலூர் ரயில் நிலையம் மற்றும் அரசு மருத்துமனை வரை பேருந்துகள் அல்லது ஷேர் ஆட்டோக்களை இயக்க வேண்டும்.ஆண்டிமடம் ஜெயச்சந்திரன்: கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கணினி எடையை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். கூவாத்தூர் ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். காப்பீடு பணிக்கு தாற்காலிக பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றார்.

Related Stories: