இன்னல்களுக்கு ஆளாக்கி வரும் இ அடங்கல் திட்டத்தை திரும்ப பெற வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்

அரியலூ, ஜூலை 25: இந்தியாவிலேயே முதன்முதலில் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இ அடங்கல் திட்டத்தால் விவசாயிகள் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே இந்த திட்டத்தை திரும்ப பெற வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். இந்தியாவில் இ அடங்கல் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதை முதன்முதலில் தமிழகத்தில் உள்ள விவசாயிகள் மத்தியில் அறிமுகப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இத்திட்டம் கடந்த 1ம் தேதி முதல் தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்களில் 10 லட்சம் ஏக்கர் நெல் சாகுபடி நடைபெறும் நிலப்பரப்பில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுவரை விவசாயிகள் தங்கள் நிலங்களில் சாகுபடி செய்த பயிர்களுக்கு அந்தந்த கிராம நிர்வாக அலுவலர் மூலம் சிட்டா மற்றும் அடங்கல் பெற்று அரசின் சாகுபடி மானிய திட்டங்கள், தோட்டக்கலைத்துறை சாகுபடி திட்டங்கள், விதை, உரம், பூச்சிக்கொல்லி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, தேசிய வங்கிகளில் பயிர் கடன், நகை கடன் போன்ற பல்வேறு திட்டங்கள் வாயிலாக பயன்பெற்று வந்தனர். இதன்மூலம் விவசாயிகள் கடன் பெற்று சாகுபடியை துவங்கவும் மற்றும் விதை, உரம் உள்ளிட்ட இடுபொருட்களை வாங்கி சாகுபடி பணிகளை துவங்க வசதியாக இருந்தது. ஆனால் இ அடங்கல் திட்டம் மூலம் இப்பயன்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுவிட்டது. ஆன்லைன் மூலம் இதுவரை பொதுமக்கள் சாதி சான்று, வருமான சான்று, இருப்பிட சான்று போன்றவை பெற்று வருவதுபோல் தற்போது இ அடங்கல் என்ற ஆன்லைன் மூலம் சிட்டா மற்றும் அடங்கல் பெற வேண்டும்.

இனி கிராம நிர்வாக அலுவலர்கள் நேரடியாக விவசாயிகளுக்கு சிட்டா மற்றும் அடங்கல் தர முடியாது. கிராம நிர்வாக அலுவலர்கள் விவசாயிகள் ஈ அடங்கல் மூலம் ஆன்லைனில் சிட்டா மற்றும் அடங்கலுக்கு விண்ணப்பித்தால் அதை கிராம நிர்வாக அலுவலர் நேரடியாக நிலத்துக்கு சென்று விண்ணப்பத்தில் உள்ள விவரங்கள் சரியாக இருக்கிறதா, பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளதா, எவ்வளவு பரப்பில் செய்யப்பட்டுள்ளது என்பதை கள ஆய்வு செய்து அவற்றை வருவாய் ஆய்வாளருக்கு பரிந்துரை செய்வார். வருவாய் ஆய்வாளர் மீண்டும் கள ஆய்வு செய்து கிராம நிர்வாக அலுவலர் கொடுத்துள்ள பரிந்துரையை ஆய்வு செய்து அவர் கூடுதல் வட்டாட்சியருக்கு பரிந்துரை செய்வார். கூடுதல் வட்டாட்சியர் வட்டாட்சியருக்கு பரிந்துரை செய்வார். இதன்பிறகு அதில் உள்ள தகவல்கள் சரியாக உள்ளது என வட்டாட்சியர் முடிவு செய்த பின்பே இ அடங்கல் மூலம் சிட்டா மற்றும் அடங்கல் கிடைக்க ஆன்லைனில் ஒப்புதல் அளிக்கப்படும். அதன்பிறகே விவசாயிகளின் கைகளுக்கு சிட்டா மற்றும் அடங்கல் கிடைக்கும். இதனால் இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: