கடைகளை அகற்றி சாலை விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு நாகர்கோவிலில் வணிகர் சங்கம் கடையடைப்பு மறியலில் ஈடுபட்ட 68 பேர் கைது

நாகர்கோவில், ஜூலை 24: நாகர்கோவில் செட்டிக்குளம் - கோட்டார் இடையே கடைகளை அகற்றி சாலை விரிவாக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் கடை அடைப்பு மற்றும் மறியல் போராட்டம் நடந்தது. மறியலில் ஈடுபட்ட 68 பேரை போலீசார் கைது செய்தனர். நாகர்கோவிலில் செட்டிக்குளம் சந்திப்பு முதல் கோட்டார் சவேரியார் கோயில் சந்திப்பு வரை சாலை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதற்காக அந்த பகுதியில் உள்ள தேசிக விநாயகர் கோயிலுக்கு சொந்தமான இடத்தை மாநகராட்சியிடம் ஒப்படைத்து ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதன்படி இந்த பகுதியில் உள்ள கடைகளில் குறிப்பிட்ட அளவுக்கு இடிக்க வேண்டும் என்று மாநகராட்சி அளந்து குறியீடு நிர்ணயம் செய்துள்ளது. தனியார் இடங்களில் குறியீடுகள் செய்து இடிக்குமாறு கூறியுள்ளனர்.இதற்கிடையே வணிகர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் கடைகள் மற்றும் வீடுகளை இடிக்க நினைக்கும் மாநகராட்சியை கண்டித்து  நாகர்கோவில் மாநகரம் முழுவதும் உள்ள வர்த்தக நிறுவனங்கள் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் நாகர்கோவில் நகர பகுதியில் பெரும்பாலான வணிக, வர்த்தக நிறுவனங்கள் நேற்று காலை முதல் திறக்கப்படவில்லை.

கோட்டார் கம்போளம் மார்க்கெட் பகுதியில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. வணிக, வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தன. இதனால் கடைகளில் பொருட்கள் வாங்க வந்த மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். சரக்குகள் ஏற்றி இறக்கும் பணிகளும் பாதிக்கப்பட்டன. இதனால் லாரிகள் சரக்குகளுடன் ஆங்காங்கே நிறுத்திவிடப்பட்டன.

வர்த்தகம் முடங்கியதால் கோட்டார் கம்போளம் பகுதிகள் வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டன. கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால் ஏராளமான வியாபாரிகள் கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர். மறியல் போராட்டத்துக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்ட தலைவர் டேவிட்சன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் நாராயணராஜா, பொருளாளர் ஜேம்ஸ்மார்சல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் வெள்ளையன் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன், திமுக மாநில மீனவரணி செயலாளர் பெர்னார்டு, மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஹெலன்டேவிட்சன், திக மண்டல செயலாளர் வெற்றிவேந்தன், காங்கிரஸ் நகர தலைவர் அலெக்ஸ், செட்டிக்குளம் வியாபாரிகள் சங்க தலைவர் கதிரேசன், நாகர்கோவில் சங்க தலைவர் நெல்லையப்பன், சங்க மாவட்ட துணைத்தலைவர் கத்பட், ராஜதுரை, கிராஸ் அருள்ராஜ், கருங்கல் ஜார்ஜ் உட்பட நிர்வாகிகள், வியாபாரிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் கோஷங்கள் எழுப்பிய வண்ணம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட 4 பெண்கள் உட்பட 68 பேரை போலீசார் கைது செய்தனர்.

முன்னதாக வணிகர் சங்கத்தினர் கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர். மனுவில், ‘வணிகர்கள் தனது வாழ்வாதாரங்களையும், நிறுவனங்களையும், வீடுகளையும் இடிக்க முற்படும் நிலையில் வணிகர்களுக்கு வேறு வழியில்லை. எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் சாலை விரிவாக்கம், மேம்பாலம் அமைத்தல் போன்ற திட்டங்களை கைவிட வேண்டும். கட்டாயம் பாலம் அமைத்தே தீருவோம், நிதி ஒதுக்கப்பட்டுவிட்டது என்று உறுதியாக இருந்தால் அதற்காக இழப்பீடு மற்றும் நிவாரணங்களை நிலம், கட்டிடம், தொழில் செய்பவர் மற்றும் பணியாளருக்கு இழப்பீடு வழங்கி திட்டத்தை நிறைவேற்றிட வேண்டும். மாநகர பகுதிகளில் பல ஆண்டுகளாக குடும்பமாக வாழ்ந்து வரும் வீடுகளை சீல் வைத்திருப்பதை ரத்து செய்திட வேண்டும். டவுன் பகுதி முழுவதும் நடைபாதைகளை இரு பகுதிகளிலும் இரண்டு அடி விரிவுபடுத்தி சாலை பகுதியை ஆக்ரமித்திருக்கும் நடைபாதை தடுப்புகளை அப்புறப்படுத்திட வேண்டும். சாலையில் வெள்ளைக்கோட்டிற்கு உள்பகுதியில் இரு சக்கர வகனங்கள் நிறுத்த அனுமதி வழங்கிட வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

உரிமைக்கான போராட்டம்: வெள்ளையன் போராட்டத்தை தொடக்கி வைத்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் வெள்ளையன் பேசியதாவது: வணிகம் நமது வாழ்வுரிமை. இந்த உரிமையை எந்த காரணத்தினாலும் அழிந்துவிட அனுமதிக்க கூடாது. நமது உரிமையை காப்பாற்றியாக வேண்டும். வாழ்வாதாரத்தை அழித்த பிறகு புலம்புவதினால் பலனில்லை. நியாயமான கோரிக்கைகளை ஆட்சி நிர்வாகத்தினர் இணக்கமாக, உண்மையை புரிந்துகொள்ள மறுத்தால் போராடித்தான் ஆக வேண்டும். நாகர்கோவிலில் மட்டுமல்ல மாநிலம் முழுவதும் வணிகர்கள் தங்கள் உரிமைக்காக போராடி வருகின்றனர். பல போராட்டங்களில் நாம் வெற்றி பெற்றுள்ளோம். இதிலும் வெற்றி பெறுவோம். அடுத்து குமரி மாவட்ட அளவிலும், தமிழகம் தழுவிய அளவிலும் இந்த போராட்டத்தை முன்னெடுத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: