கேரள கடலில் மாயமான மேலும் ஒரு குமரி மீனவர் உடல் மீட்பு

நாகர்கோவில், ஜூலை 24: கேரள கடலில் மாயமான மேலும் ஒரு குமரி மாவட்ட மீனவர் உடல் மீட்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டம் நீரோடி மீனவர் கிராமத்தை சேர்ந்த ஸ்டான்லி, ஜாண்போஸ்கோ, சகாயம், நிக்கோலஸ், ராஜூ ஆகிய 5 மீனவர்கள் கடந்த 13ம் தேதி கேரள மாநிலம் நீண்டகரை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நாட்டுப்படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். ஆனால் கடல் சீற்றம் காரணமாக படகுடன் கரை திரும்பினர். அப்போது கடலரிப்பு தடுப்பு சுவரில் மோதி படகு கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த 5 மீனவர்களில் ஸ்டான்லி, நிக்கோலஸ் ஆகியோர் நீந்தி கரைசேர்ந்தனர்.இதர 3 மீனவர்கள் கடலில் மாயமாயினர். அவர்களை விமானப்படை விமானம் மற்றும் கப்பல்கள் மூலம் தேடும் பணி நடந்தது. இந்தநிலையில் கடந்த 21ம் தேதி முருக்கம்பாடம் கடற்கரை பகுதியில் சகாயத்தின் உடல் கரை ஒதுங்கியது. மற்ற 2 மீனவர்களின் கதி என்ன ஆனது என தெரியாமல் இருந்து வந்தது.இந்த நிலையில் விழிஞ்ஞத்தில் இருந்து 7 கடல் மைல் தொலைவில் ராஜூ என்ற மீனவரின் உடலும் கண்டெடுக்கப்பட்டது. பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது ஜாண்போஸ்கோவை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. அவரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Related Stories: