ஆடி முதல் செவ்வாய் அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை

நாகர்கோவில், ஜூலை 24:  குமரி மாவட்டத்தில் ஆடி மாத முதல் செவ்வாய்க்கிழமையையொட்டி அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. அவ்வையாரம்மன் கோயிலில் பெண்கள் கொழுக்கட்டை படையல் வைத்து வழிபாடு செய்தனர். தமிழ் மாதங்களில் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும். இந்த மாதத்தில் சுப நிகழ்ச்சிகளை தள்ளி வைத்து விட்டு முழுக்க, முழுக்க அம்மன் வழிபாட்டுக்கே முக்கியத்துவம் அளிப்பார்கள். குறிப்பாக ஆடி செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகள் மிகவும் விசேஷமானதாகும். இந்த மாதத்தில் வரும் ஆடிப்பூரம், ஆடி அமாவாசை உள்ளிட்டவை விமரிசையாக கருதப்படும். சிறப்பு நிறைந்த ஆடி மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமையான நேற்று கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில், மண்டைக்காடு பகவதியம்மன் கோயில், வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில், வடசேரி காமாட்சியம்மன் கோயில், முப்பந்தல் இசக்கியம்மன் கோயில், ஆலமூடு இசக்கியம்மன் கோயில், நாகர்கோவில் நடுக்காட்டு இசக்கியம்மன் கோயில், சுசீந்திரம் முன்னுதித்த நங்கையம்மன் கோயில், ஆதி பராசக்தி கோயில்கள், முத்தாரம்மன் கோயில்கள் உள்ளிட்ட எல்லா அம்மன் கோயில்களிலும் நேற்று சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடந்தன. காலையிலேயே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். நெய் விளக்கு மற்றும் மா விளக்கு வழிபாடும் நடத்தினர்.

செண்பகராமன்புதூர் அருகே உள்ள அவ்வையாரம்மன் கோயிலில் ஆடி செவ்வாய்க்கிழமையையொட்டி காலையிலேயே பெண்கள் குவிந்தனர். கொழுக்கட்டை படைத்து அம்மனை வழிபட்டனர். திருமணமாகாத இளம்பெண்கள், புதுமண தம்பதிகள் வந்து கொழுக்கட்டை படையல் வைத்து வழிபாடு நடத்தினால் அவர்களின் வேண்டுதல் நிறைவேறும் என்பது நம்பிக்கை ஆகும். அதன்படி இளம்பெண்கள் அதிகளவில் வந்து இருந்தனர். குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து இருந்தனர். பக்தர்கள் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன. நாகர்கோவில் கிருஷ்ணன்கோவிலிலில் உள்ள ஆதிபராசக்தி கோயி லில் 135 பெண்கள் மா விளக்கு ஏந்தி வழிபாடு நடத்தினர். மாலையில் சிறப்பு பூஜைகள், விளக்கு பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்றது.

Related Stories: