குமரி மெட்ரிக் பள்ளியில் பொது தேர்தல் போல் நடந்த டீன் கிளப் நிர்வாகிகள் தேர்வு நீண்ட வரிசையில் நின்று மாணவர்கள் வாக்களிப்பு

நாகர்கோவில், ஜூலை 24: வேட்பு மனு தாக்கல், பிரசாரம், வாக்குப்பதிவு என பொது தேர்தல் போல், குமரி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியின் டீன் கிளப் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. நாகர்கோவில் கோட்டார் குமரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 1300 மாணவ, மாணவிகள் படிக்கிறார்கள். இவர்களில் 6, 7, 8ம் வகுப்பில் படிக்கும் மாணவ, மாணவிகளை மையமாக வைத்து டீன் கிளப் (வளரிளம் பருவ ஆலோசனை மையம்) நிர்வாகிகள் தேர்தல் நேற்று நடந்தது. தலைவர், செயலாளர் பொருளாளர் பதவிக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் என தனித்தனியாக தேர்தல் நடத்தப்பட்டு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். வேட்பாளர்கள் அறிவிப்பு, வேட்பு மனு தாக்கல், பிரசாரம், வாக்குப்பதிவு என ஒரு பொதுத்தேர்தல் போல் நடந்து முடிந்துள்ளது, குமரி டீன் கிளப் நிர்வாகிகள் தேர்தல். வாக்குப்பதிவு நாளன்று வாக்காளர்கள் வரிசையில் நிற்பது போல் நீண்ட வரிசையில் நின்று மாணவ, மாணவிகள் வாக்களித்து நிர்வாகிகளை தேர்வு செய்து இருக்கிறார்கள். இதன் வாக்காளர்களாக 6, 7, 8ம் வகுப்பு மாணவ, மாணவிகள் இருந்தனர். இவர்களில் மாணவர்கள் 208 பேர். மாணவிகள் 135 பேர் ஆவர். கடந்த இரு வாரங்களுக்கு முன் தேர்தல் அறிவிக்கப்பட்டு, வேட்பு மனு தாக்கல் நடைபெற்று உள்ளது.

 தேர்தல் பார்வையாளராக இந்த பள்ளியின் ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டு, வேட்பு மனுக்கள் பரிசீலனை நடந்து, வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டு உள்ளது. பின்னர் போட்டியிடும் வேட்பாளர்கள் உணவு இடைவேளை, டீ பிரேக் போன்ற சமயங்களில் அந்தந்த வகுப்புகளுக்கு சென்று நோட்டீஸ் வினியோகம் செய்து பிரசாரம் செய்துள்ளனர். நேற்று முன் தினம் பிரசாரம்  முடிந்து, நேற்று தேர்தல் நடைபெற்று உள்ளது. காலையில் மாணவர்களுக்கான தேர்தலும், பின்னர் மாணவிகளுக்கான நிர்வாகிகள் தேர்தலும் நடந்தது. இடைவேளை சமயங்களில் அந்தந்த வகுப்புகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் வந்து வாக்களித்தனர். இதற்கான வாக்கு சீட்டுகள் மற்றும் அந்தந்த வேட்பாளர்களுக்கு தனித்தனி சின்னங்கள் போன்றவை அச்சிடப்பட்டு இருந்தன.  வாக்கு சாவடிகளில் பெயர் பதிவுகள் நடைபெறுவது போல் இங்கு வாக்களிக்க வந்த மாணவ,மாணவிகளின் பெயர்களும் பதிவு செய்யப்பட்டு, ரகசிய வாக்களிப்பு முறையில் மாணவ, மாணவிகள் வாக்குகளை பதிவு செய்தனர்.  உண்மையில் பொது தேர்தலுக்கான உணர்வை டீன் கிளப் தேர்தல் தந்தது.

வாக்களிப்பு அவசியத்தை உணர்த்த மாதிரி தேர்தல்

பள்ளியின் தாளாளர் சொக்கலிங்கம் கூறுகையில், வளரிளம் பருவமான 6, 7, 8ம் வகுப்பு மாணவ, மாணவிகளை மையமாக வைத்து இந்த டீன் கிளப் செயல்படுகிறது. ஒரு பொது தேர்தல் போல் இதன் நிர்வாகிகளை தேர்வு செய்துள்ளோம். இன்றைய மாணவர்கள் தான், நாட்டின் நாளைய எதிர்காலம் ஆவார்கள். வாக்களிப்பது அவர்களுக்கு மிகவும் முக்கியம் என்பதை உணர்த்தும் வகையில்  இந்த மாதிரி தேர்தலை நடத்தி உள்ளோம்  என்றார்.

Related Stories: