அமராவதி அணையில் கூடுதல் நாட்களுக்கு தண்ணீர் திறக்க கோரிக்கை

திருப்பூர், ஜூலை 24:     தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை பொய்த்து போனதால் அமராவதி ஆற்றுப்பாசன பகுதி விவசாயிகள் அணை நீரைத்தான் முழுமையாக நம்பியுள்ளனர். அமராவதி அணையின் மூலம் பழைய ஆயக்கட்டு, புது ஆயக்கட்டு, ராமகுளம், கொளிஞ்சிவாடி, தாராபுரம், விராட்சிமங்கலம் ஆகிய பாசன கால்வாய் மூலம் நேரடியாக 57 ஆயிரத்து 404 ஏக்கர் விவசாய விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அமராவதி ஆற்றில் உள்ள பல்வேறு இடங்களில் தரைமட்ட தொட்டிகள் அமைத்து 27 கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் 300க்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீர் தேவையை உள்ளாட்சி அமைப்புகள் பூர்த்தி செய்கிறது. பருவமழை தொடங்கியுள்ள நிலையில், அமராவதி அணைக்கு நீர்வரத்தாக உள்ள, பாம்பாற்றில் நீர்வரத்து அதிகரித்து, அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.  தற்போது அணையின் நீர் மட்டம் 41 அடியாக உயர்ந்துள்ளது. அமராவதி பழைய, புது ஆயக்கட்டு பாசன பகுதி விவசாயிகள் பருவ மழை எதிர்பார்த்து தங்களுடைய விளைநிலங்களை உழுது பன்படுத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக அமராவதி ஆற்றில் தொடர் நீரோட்டம் இன்றி காய்ந்து வறண்டு காணப்பட்டது. இதனால், 27 கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் பயன்பெறும் 300க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சீரான குடிநீர் விநியோகிக்க முடியாமல் உள்ளாட்சி அமைப்புகள் திணறி வந்த நிலையில், அமராவதி அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருவதால், ஆற்றில் தண்ணீர் திறந்து விடவேண்டுமென விவசாயிகள், பொது மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.  இதை தொடர்ந்து அமராவதி அணையிலிருந்து நேற்று முன்தினம் மாலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தண்ணீர் திறந்து விட்டனர். தண்ணீர் 3 நாட்கள் மட்டும் திறப்பு என்பது குறைவாக இருப்பதால், குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாது. எனவே அணையில் தண்ணீர் திறக்கும் நாட்களை  அதிகரிக்க வேண்டுமென அரசுக்கு விவசாயிகள், பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: