சத்தி கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.10 கோடிக்கு பருத்தி விற்பனை

சத்தியமங்கலம், ஜூலை 24: சத்தியமங்கலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் நேற்று நடந்த ஏலத்தில் ரூ.1.10 கோடிக்கு பருத்தி விற்பனையானது.  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பவானிசாகர், புஞ்சைபுளியம்பட்டி, காவிலிபாளையம், பெரியூர், உக்கரம், அரசூர், கெம்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பருத்தி பயிரிட்டுள்ளனர். செடியில் இருந்து பறிக்கப்பட்ட பருத்தி பஞ்சினை சாக்குமூட்டைகளில் அடைத்து விற்பனைக்காக சத்தியமங்கலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு கொண்டு வந்து ஏல முறையில் விற்பனை செய்து வருகின்றனர்.  அதன்படி, நேற்று நடந்த ஏலத்திற்கு விவசாயிகள் 5540 மூட்டை பருத்தி விற்பனைக்கு கொண்டு வந்தனர். பருத்தியை ஏலம் எடுக்க கோவை, அன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்தனர்.இதில், ஒரு கிலோ பருத்தி ரூ.54.80 முதல் ரூ.61 வரை விலை போனது. மொத்தம் 5540 மூட்டை பருத்தி ரூ.1.10 கோடிக்கு விற்பனையானதாக கூட்டுறவு சங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: