ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை, ஜூலை 24:  கோவை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் 880க்கும் மேற்பட்டோர் மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சி அலுவலகங்களில் ஒரு நாள் பணி புறக்கணிப்பு செய்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 ஜாக்டோ-ஜியோ தலைமை ஒருங்கிணைப்பாளரும், தமிழக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில தலைவருமான சுப்ரமணியம் பணி நிறைவு பெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். கோவை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் 146 பேர் மீது போடப்பட்டுள்ள 17பி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தினர் கோவை மாவட்டம் முழுவதும் நேற்று ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க தலைவர் முத்துராஜ் தலைமையில் ஒரு நாள் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மாவட்டம் முழுவதும் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்கள், 282 ஊராட்சிகளில் பணியாற்றும் 880க்கும் மேற்பட்ட ஊழியர்களும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் துறை சார்ந்த பணிகள் பாதிக்கப்பட்டன. மேலும் அடுத்த கட்ட போராட்டம் குறித்து வரும் 26ம் தேதி தென்காசியில் நடைபெறும் சங்க மாநாட்டில் முடிவு செய்யப்படும் என ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் தெரிவித்தனர்.

சூலூர்: ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் மற்றும் அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத்தலைவர் சுப்பிரமணியம் கடந்த மாதம் பணி ஓய்வு நாளில் தமிழக அரசால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனை கண்டித்து, நேற்று சுல்தான்பேட்டைஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த போராட்டத்தில் வட்டார ஆணையாளர் சந்திரகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ஷீலா, அலுவலர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜெகதீசன், ஒன்றிய தலைவர் கனகராஜ், அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் மற்றும் ஊராட்சி செயலாளர் கல்பனா, ஜெயலட்சுமி, மனோரஞ்சிதம், முரளி, செந்தில்குமார் மற்றும் தேவக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர். இதனால் வழக்கமான அலுவல் பணிகள் பாதிக்கப்பட்டன.

Related Stories: