ஆபத்தான கல்குவாரிகளை மூட கனிம வளத்துறை உத்தரவு

கோவை, ஜூலை 24:  கோவை மாவட்டத்தில் பயன்பாட்டில்லாத கல் குவாரிகளில் தடுப்பு சுவர் அமைக்கவேண்டும் என கனிம வளத்துறை உத்தரவிட்டுள்ளது.  கோவை மாவட்டத்தில் மதுக்கரை, போடிபாளையம், சின்ன குயிலி, பெரிய குயிலி, மைலேரிபாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை உள்ளிட்ட பகுதியில் 57 கல் குவாரிகள் உள்ளது. சிலர் பயன்பாடில்லாத கல் குவாரிகளை கட்டிட கழிவு கொட்ட பயன்படுத்தி வருகின்றனர். மதுக்கரை செட்டிபாளையம் ரோட்டில் இரண்டு கல் குவாரிகள் மூடப்பட்டது. இந்த கல் குவாரிகளில் தேங்கும் நீரில் பொதுமக்கள் சிலர் குளிக்க, துணி துவைக்க பயன்படுத்துகின்றனர். அன்னூர், கோவில்பாளையம், மதுக்கரை பகுதியில் கல் குவாரிகளில் குளிக்க சென்றவர்கள் நீரில் மூழ்கி இறந்துள்ளனர்.  கோவை மாவட்ட கனிம வளம் மற்றும் சுரங்க துறையினர் கூறுகையில், ‘‘ மனித உயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் நீர் தேங்கிய நிலையில் ஆபத்தான வகையில் குவாரிகள், கல் குழிகளை வைத்திருக்க கூடாது. கல் குவாரிகளில் பொதுமக்களை அனுமதிக்க கூடாது. தடுப்பு சுவர் அமைத்து கல் குவாரிகளுக்கு செல்லாமல் தடுப்பு ஏற்படுத்தவேண்டும். கோவை மாவட்டத்தில் உயிரிழப்பு ஏற்படுத்திய மதுக்கரை பகுதி கல் குவாரி உட்பட சில கல் குவாரிகளை மூட சொல்லி நோட்டீஸ் தரப்பட்டுள்ளது. வீடு, வாகனங்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கல் குவாரிகள் இயங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும்.  மாவட்ட அளவில், புதிதாக பட்டா நிலங்களில் கல் குவாரி அமைக்க கடந்த ஆண்டில் இருந்து யாரும் முன் வரவில்லை. கல் குவாரி தொடர்பாக புகார் வந்தால் உடனடியாக கள ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். குடியிருப்புகளுக்கு அருகேயுள்ள கல் குவாரிகளில் வெடி வைக்க கூடாது. கற்களை வெட்டி எடுக்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது, ’’ என்றனர்.

Related Stories: