தொடர்ந்து 24 மணி நேரம் மின்வெட்டை கண்டித்து இரவில் சாலை மறியல்

மதுரை, ஜூலை 24: மதுரை அருகே தொடர் மின்வெட்டை கண்டித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.மதுரையை அடுத்த கடச்சனேந்தல், காதக்கிணறு, அழகர்கோவில் மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. இந்த மின்தடை ஒரு மணி நேரம் இருக்கும். பின்னர் சரியாகி விடும். இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு, இரவு 10 மணிக்கு ஏற்பட்ட மின்தடை, மறுநாள் அதிகாலை 5 மணிக்குத்தான் வந்தது. இதனால் அப்பகுதி மக்கள் இரவு முழுவதும் பெரிதும் சிரமப்பட்டனர். இது தொடர்பாக மின்வாரியத்தில் புகார் அளித்தும் பயனில்லை.

இதனையடுத்து அன்றிரவு நள்ளிரவில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மின்வாரிய அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு வந்து, மின்சாரம் தடையின்றி தொடர்ந்து வழங்கப்படும் என உறுதியளித்தனர்.ஆனாலும், நேற்று முன்தினம் நள்ளிரவில் போன மின்சாரம், நேற்று இரவு வரை சுமார் 24 மணி நேரம் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர், கடச்சனேந்தல் மெயின் ரோட்டில் நேற்றிரவு திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த போலீசாரும், மின்வாரிய அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து, மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமரசம் பேசினர். மின்சாரம் வந்தால் தான் அந்த இடத்தை விட்டு செல்வோம் எனக்கூறி போலீசாரிடமும், அதிகாரிகளிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மின்சாரம் இனிமேல் தடையின்றி வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து நேற்றிரவு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: