கண்மாயில் ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி பனையூர் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகம் முற்றுகை

மதுரை, ஜூலை 24:  கண்மாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி, மதுரை கலெக்டர் அலுவலகத்தை பனையூர் கிராம மக்கள்  முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.மதுரை சிந்தாமணி அருகில் உள்ளது பனையூர். இந்த ஊராட்சிக்கு சொந்தமான 90 ஏக்கர் பரப்பளவுள்ள கண்மாய் ரிங்ரோட்டில் உள்ளது. இதன்மூலம் இப்பகுதியிலுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.இந்நிலையில், கண்மாயின் ஒரு பகுதியை ஆக்கிரமிப்பு செய்து, பிளாட் போட்டு விற்பனை செய்கின்றனர். ஆக்கிரமிப்பை அகற்றி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, கிராம மக்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு தாசில்தார், கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தனர். ஆனால் நடவடிக்கை எதுவும் இல்லை.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், விவசாயிகள் என 200க்கும் மேற்பட்ேடார் திரண்டு நேற்று ரிங்ரோட்டில் மறியல் செய்ய முயன்றனர். அப்போது, போலீசார் அதை தடுத்து நிறுத்தினர். அதன்பின்பு அவர்கள் மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்களுடன் மதுரை தெற்கு தாசில்தார் அனீஸ்சர்தார் பேச்சுவார்த்தை நடத்தினார். கண்மாய்க்கான பகுதிகளை அளந்து, அதில் ஆக்கிரமிப்பு இருந்தால் அகற்றப்படும் என அவர்களிடம் உறுதி கூறினார். அதனை கிராம மக்கள் ஏற்றுக்கொண்டனர். உடன்பாடு ஏற்பட்டதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். முற்றுகை போராட்டம் காரணமாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் பரபரப்பாக காணப்பட்டது.

Related Stories: