ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புராதன சின்னங்கள் மேம்படுத்தும் பணி தீவிரம் ₹21.70 கோடி செலவில் புதிய வழித்தடம் சுற்றுலா பயணிகள் நடந்து சென்று ரசிக்கலாம்

மதுரை, ஜூலை 24:  ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புராதன சின்னங்களை மேம்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பணி முடிந்ததும் பகுதிகளை இணைத்து புதிய வழித்தடப்பாதை அமைக்கும் பணி ரூ.21.70 கோடி செலவில் அமைக்கப்படும். சுற்றுலா பயணிகள் நடந்து சென்று ரசிக்கலாம்.

மதுரை மாநகர் புராதன மற்றும் கலாச்சார நகரமாக உள்ளது. மீனாட்சி அம்மன் கோயில், மீனாட்சி பூங்கா, நான்கு சித்திரை வீதிகள், ராயகோபுரம், பத்துத்தூண், திருமலைநாயக்கர் மகால், விட்டவாசல், புதுமண்டபம், குன்னத்தூர் சத்திரம் உள்ளிட்ட பல்வேறு புராதன சின்னங்கள் அமைந்துள்ளன. இவற்றை இணைத்து புதிய வழித்தடப் பாதை ரூ.21.70கோடி செலவில் அமைக்கப்படுகிறது. மத்திய அரசின் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் மதுரை மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் உயர்நிலை திட்ட ஒப்பளிக்கும் குழுவினரால் புராதன சின்ன பகுதிகளை மேம்படுத்தும் பணிக்கு பொலிவுறு நகர திட்டப்பகுதி மேம்பாடு என்ற அடிப்படையில் கடந்த ஆண்டு ஜூன் 13ல் நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது.

குறிப்பாக இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக ரூ.72.39 கோடிக்கு தொழில்நுட்ப ஒப்புதல் கோரப்பட்டது. இதையடுத்து 8 பகுதிகள் தேர்வு செய்து பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு பகுதிக்கும் நிதியை இந்த ரூ.72.39 கோடியில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி உள்ள பகுதிகளாக உள்ள நான்கு சித்திரை வீதிகள், மீனாட்சி பூங்கா போன்றவை ரூ.15.24 கோடியில் மேம்படுத்தப்பட இருக்கிறது. இந்த பகுதிகளில் பல லட்ச ரூபாய்களை செலவிட்டு ஏற்கனவே பேவர்பிளாக் கற்கள் சாலையில் பதிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த பணிகள் இன்னும் துவங்கப்படவில்லை. இதுதவிர ராய கோபுரத்தை ரூ.3.91கோடியில் மின்னொளியில் ஒளிர வைக்கப்படும் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுவும் கிடப்பில் உள்ளது.

மேலும் பத்துத்தூண் பகுதியை மேம்படுத்துதல் மற்றும் விளக்குத்தூண் பகுதிகள் ரூ.2.87 கோடி செலவில் ஒளிர வைக்க திட்டமிடப்பட்டு தற்போது பணி நடந்து வருகிறது. திருமலைநாயக்கர் மகாலை சுற்றியுள்ள பகுதிகள் ரூ.12கோடியில் மேம்படுத்தும் பணியும் நடந்து வருகிறது. மேலும் விட்டவாசல், புதுமண்டபம் பகுதிகளை ரூ.4.57கோடி நிதியில் மேம்படுத்தப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. புதுமண்டபத்தில் உள்ள கடைகளை குன்னத்தூர் சத்திரத்திற்கு மாற்றும் திட்டம் ரூ.7.91கோடி செலவில் அமைக்கப்பட்டு வருகிறது. இது தவிர ஜான்சிராணி பூங்கா அருகில் வருகை மையம் (தெற்கு மேற்கு நுழைவுவாயில்) ரூ.4.19கோடி செலவில் அமைக்கப்பட இருக்கிறது.

 * மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு, இந்த புராதன சின்னங்களை இணைக்கும் வகையில் புராதன வழித்தடம் ரூ.21.70கோடி செலவில் அமைக்கப்பட இருக்கிறது. இந்த பாதை முழுவதும் ஒரே விதமாக பேவர் பிளாக் கற்களை பதிக்க இருக்கிறோம். மதுரை வரும் சுற்றுலா பயணிகள் நடந்தே இந்த பாதையில் சென்றால் அனைத்து புராதன சின்னங்களையும் எளிதில் கண்டு மகிழலாம்’’ என்றார்.

Related Stories: