செக்கானூரணி பணிமனையில் தரமற்ற உணவு வழங்குவதாக போக்குவரத்து ஊழியர்கள் புகார்

திருமங்கலம், ஜூலை 24: செக்காணுரணி போக்குவரத்துக்கழக பணிமனையில் ஊழியர்களுக்கு தரமற்ற உணவு வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

அரசு போக்குவரத்துக்கழக மதுரை கோட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு புதியதாக செக்காணுரணியில் பணிமனை துவக்கப்பட்டது. முதலில் 33 பஸ்களுடன் துவக்கப்பட்ட இந்த கிளையில் தற்போது 42 பஸ்கள் உள்ளன. டவுன் பஸ்களுடன் கோவை, திருச்செந்தூர் மற்றும் கம்பத்திற்கு வெளியூர் பஸ்கள் இயக்கப்படுகின்றன. டிரைவர், கண்டக்டர்கள் மற்றும் மெக்கானிக்குகள் என நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த கிளையில் பணிபுரிந்து வருகின்றன. புதியதாக துவக்கப்பட்ட கிளை என்பதால் மதியம் மற்றும் இரவு வேளையில் ஊழியர்களுக்கு இங்குள்ள கேண்டின் மூலமாக உணவு வழங்கப்படுகிறது.

கடந்த ஓராண்டுகளாக தரமான உணவு வழங்கப்பட்ட நிலையில், தற்போது கேண்டின் நிர்வாகம் மாறியுள்ள நிலையில் தரமற்ற உணவு விநியோகம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. ரேசன் அரிசி சாப்பாடு மற்றும் விலை குறைந்த காய்கறிகளை கொண்டு உணவு சமையல் செய்யப்பட்டு போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனை உண்ணும் தொழிலாளர்கள் பலரும் உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றனர்.

இது குறித்து போக்குவரத்துக்கழக ஊழியர்கள் கூறுகையில், ‘தரமற்ற உணவு கேண்டினில் விநியோகம் செய்யப்படுவதை கண்டித்து போராட்டம் கூட நடத்திவிட்டோம். ஆனால் நடவடிக்கை இல்லை. இதனால் பல தொழிலாளர்கள் வீடுகளில் இருந்து உணவு கொண்டுவர துவங்கிவிட்டோம்’ என்றனர்.

போக்குவரத்துக்கழக அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி தரமான உணவுகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும்.

Related Stories: