மேலூர் அருகே கிராமத்தில் மயான பாதையை சீரமைத்து தான் ஒவ்வொரு முறையும் செல்ல வேண்டும் இறந்தாலும் நிம்மதியில்லை

மேலூர், ஜூலை 24: எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் ஒவ்வொரு முறையும் மயானத்திற்கு செல்லும் போது பாதையை சீரமைத்து தான் செல்ல வேண்டிய நிலையில் கிராம மக்கள் உள்ளனர்.கொட்டாம்பட்டி ஒன்றியம் கம்பூரில் யார் வீட்டிலாவது இறப்பு ஏற்பட்டால் கிராம மக்கள் மிகுந்த துக்கத்தில் ஆழ்ந்து விடுவார்கள். இறப்புக்கு துக்கம் வழக்கமானது தான் என்றாலும், இங்கு இறந்தவரை மயானத்திற்கு எடுத்து செல்வதை எண்ணியே பலரும் அதிக துக்கமாகி விடுவார்கள்.இறந்தவர் உடலை கொண்டு செல்லும் வழியில் பாதி தூரம் வரை பேவர் பிளாக் அமைத்தவர்கள் அதை முழுமையாக அமைக்காமல் விட்டு விட்டார்கள். அமைத்த பேவர் பிளாக் வழியாக செல்ல முடியாத அளவிற்கு இயற்கை உபாதைகளும், குப்பைகளும் அருவறுப்பான வகையில் குவிந்திருக்கும். பேவர் பிளாக் முடிந்தவுடன் முட்செடிகளின் ஆக்கிரமிப்பு இருக்கும். இவற்றை சீர் செய்தால் மட்டுமே அடுத்து செல்ல முடியும்.இதை தாண்டி மயானத்திற்கு சென்றால் அங்கு அரைகுறையான மயான கொட்டகை தான் வரவேற்கும். 8 வருடங்களுக்கு முன்பு அப்போதைய ஊராட்சி தலைவரால் ஒப்பந்தம் செய்யப்பட்டு இந்த மயான கொட்டகை அமைக்கும் பணி துவங்கியது. பின்னர் நடைபெற்ற தேர்தலில் அவர் தோல்வி அடைய, அப்பணி பாதியில் நிறுத்தப்பட்டது. அடுத்த தலைவர் இப்பணியை தொடர விரும்பவில்லை.

இதனால் இன்று வரை பிணங்களை வெட்ட வெளியில் முட்செடிகளுக்கு இடையில் தான் எரியூட்டுகின்றனர். மழை காலங்களில் எரிந்து கொண்டுள்ள பிணங்கள் மீதான நெருப்பு அப்படியே அணைந்து விடுவதால், கிராம மக்கள் மிகுந்த வேதனை அடைந்து வருகின்றனர். காரியம் முடிந்து மயானத்தில் கட்டப்பட்டுள்ள குளியல் தொட்டிக்கு சென்றால் அது ஏமாற்றமாகவே அமையும். கட்டிய போது மட்டுமே தண்ணீரை பார்த்தது அந்த குளியல் தொட்டி.இதே போல் அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அடி குழாய் ஒன்றும் பயனற்று காட்சி பொருளாய் தான் உள்ளது. கிராமத்தில் இறப்பு ஏற்பட்டால் அருகில் உள்ள ஒரு விவசாயி தனது தோட்டத்து நீரையே கிராம மக்களுக்கு தந்து உதவி வருகிறார். கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இதை சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகமோ, யூனியனோ கண்டு கொள்ளாமலேயே உள்ளது. இனியாவது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: