கொடைக்கானல் பேத்துப்பாறையில்

கொடைக்கானல், ஜூலை 24: கொடைக்கானல் பேத்துப்பாறையில் முகாமிட்டுள்ள யானைகளை வனத்திற்குள் விரட்ட கோரி பொதுமக்கள் உண்ணாவிரதம் இருக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அதிகாரிகள் சமரசத்தை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர்.

கொடைக்கானல் தாலுகா, வில்பட்டி ஊராட்சிக்குட்பட்டது பேத்துப்பாறை, கணேசபுரம், அஞ்சுவீடு, அஞ்சூரான்மந்தை. இப்பகுதிகளில் கடந்த சில மாதங்களாக 30க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு விளைநிலங்களை சேதப்படுத்துவதுடன் பொதுமக்களையும் அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் யானைகளை உடனே அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பேத்துப்பாறை மக்கள் சமூகஆர்வலர் மகேந்திரன் தலைமையில் நேற்று  உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்தனர். இதையடுத்து தாசில்தார் வில்சன், வனச்சரகர் ஆனந்தகுமார் தலைமையிலான அதிகாரிகள் நேற்று காலை உண்ணாவிரதம் நடக்கவிருந்த இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள், யானைகளை கிராம பகுதிகளில் நுழைந்து விடாமல் தடுக்க வனப்பகுதியை ஒட்டி மின்வேலிகள் அமைக்க வேண்டும், வனத்திற்குள் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து 24 மணிநேரம் யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் விடுகக்கப்பட்டன. மேலும் தெருவிளக்கு இல்லாததால் யானைகள் வருவதை அறிந்து கொள்ள முடியாமல் அவதிப்படுகிறோம். எனவே சக்திநகர், அம்மன்காலனி, வெள்ளைப்பாறை, வயல்வெளி, பேத்துப்பாறை போன்ற பல்வேறு பகுதிகளில் உடனே தெருவிளக்குகள் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர். தொடர்ந்து அதிகாரிகள், அனைத்து கோரிக்கைகள் மீதும் ஒரு மாத காலத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதில் முதற்கட்டமாக நாளை (ஜூலை 25) பேத்துப்பாறை மக்களோடு இணைந்து யானைகளை வனத்திற்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதன்பிறகே பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Stories: