சேலம் மாவட்டத்தில் நடந்து வரும் குடிமராமத்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

சேலம், ஜூலை 24: சேலம் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தலைமை வகித்து, கலெக்டர் ராமன் பேசுகையில், ‘‘ஏரி, குளங்களை தூர்வாரி நீரை சேமிக்கும் வகையிலும், மேட்டூர் அணையில் விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுத்து, விளை நிலங்களுக்கு பயன்படுத்தி கொள்ளும் வகையிலும், குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக நடப்பாண்டு சேலம் மாவட்டத்திற்கு ₹5.63 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் சரபங்கா வடிநிலக்கோட்டத்திற்குட்பட்ட 9 ஏரிகள், 4 அணைக்கட்டுகள் புனரமைத்தல் பணிகளும், ஆணைமடுவு அணை, கரியகோவில் அணை பகுதிகளில் அணுகு சாலை புனரமைத்தல் பணிகளும், மேட்டூர் அணைக் கோட்டத்தின் சார்பில் சங்ககிரி, மேட்டூர் கிழக்கு கரை கால்வாயின் கிளை வாய்க்கால் புனரமைக்கும் ஒரு பணி என மொத்தம் 20 பணிகள் குடிமராமத்து திட்டத்தின் கீழ் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்திட ஏரி, பாசனதாரர் சங்க உறுப்பினர்கள், விவசாயிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,’’ என்றார். இதில் டிஆர்ஓ திவாகர், திட்ட இயக்குநர் அருள்ஜோதி அரசன், செயற்பொறியாளர் கவுதமன், மேட்டூர் அணை கோட்ட செயற்பொறியாளர் தேவராஜன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் கோபிநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: