பாப்பாரப்பட்டி கூட்டுறவு சங்கத்தில் ₹11.14 லட்சத்திற்கு பருத்தி விற்பனை

ஆட்டையாம்பட்டி, ஜூலை 24:

ஆட்டையாம்பட்டி அடுத்த பாப்பாரப்பட்டி கூட்டுறவு சங்கத்தில் நேற்று ₹11.14 லட்சத்திற்கு பருத்தி ஏலம் நடைபெற்றது. சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அடுத்த பாப்பாரப்பட்டி வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் பருத்தி ஏலம் நடைபெறுகிறது. நேற்றைய ஏலத்துக்கு ஆட்டையாம்பட்டி, சென்னகிரி, பாப்பாரப்பட்டி, பாலம்பட்டி, பைரோஜி மற்றும் இருசனாம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 16,908 கிலோ எடையுள்ள சுமார் 453 மூட்டை பருத்தியை கொண்டுவந்திருந்தனர்.இந்த பருத்தியை கொள்முதல் செய்ய ஆத்தூர், இடைப்பாடி, தேடாவூர், கொங்கணாபுரம் மற்றும் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்துகொண்டனர். விவசாயிகள் முன்னிலையில் அதிகாரிகள் ஏலத்தை நடத்தினர். இதில், சுரபி ரகம் பருத்தி கிலோ ₹54 முதல் ₹66.20 வரையும் விற்பனையானது. ஒட்டு மொத்தமாக விவசாயிகள் கொண்டுவந்த 453 மூட்டை பருத்தி ₹11.14 லட்சத்துக்கு ஏலம் போனது.

விவசாயிகளுக்கு உடனுக்குடன் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் இருந்ததால், நேற்றைய ஏலத்துக்கு பருத்தி வரத்து குறைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: