சேலத்தில் ஆடித்திருவிழா தொடங்கியது கோட்டை மாரியம்மனுக்கு பூச்சாட்டுதல்

சேலம், ஜூலை 24: ஆடி திருவிழாவையொட்டி சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் பூச்சாட்டுதல் விழா நேற்று நடந்தது. கொட்டும் மழையிலும் திரளான பக்தர்கள் வழிபட்டனர்.சேலத்தில் பிரசித்திபெற்ற கோட்டை மாரியம்மன் கோயிலில் ஆடி மாதத்தில் முதல் ெசவ்வாய் கிழமையில் தொடங்கி, கடைசி செவ்வாய் வரையிலும் ஆடிபெருவிழா கோலாகலமாக நடைபெறும். இந்நிலையில், கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வருவதால், பாலாலயம் செய்யப்பட்ட கோட்டை மாரியம்மன் உற்சவருக்கு ஆடி திருவிழா நடத்துவது என இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி, நடப்பாண்டு ஆடி திருவிழா நேற்று பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.  இதனையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து, இரவு 8 மணிக்கு பூச்சாட்டுதல் விழா நடந்தது. தொடர்ந்து சிறப்பு  பூஜைகள் நடந்தது. கொட்டும் மழையில் நனைந்தபடி பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்த பூக்களை அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். மேலும், திராளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்தனர். கோட்டை மாரியம்மனுக்கு பூச்சாட்டுதல் உற்சவத்தை தொடர்ந்து, குகை மாரியம்மன்-காளியம்மன் கோயில், தாதகாப்பட்டி கேட் சஞ்சீவராயன் பேட்டை மாரியம்மன், சின்னக்கடைவீதி சின்ன மாரியம்மன், செவ்வாய்பேட்டை மாரியம்மன்,  அம்மாப்பேட்டை செங்குந்தர் மாரியம்மன், பலப்பட்டரை மாரியம்மன், அன்னதானப்பட்டி மாரியம்மன உள்ளிட்ட எட்டுப்பட்டி மாரியம்மன் கோயில்களிலும்  பூச்சாட்டுதல் உற்சவத்துடன் ஆடிப்பண்டிகை தொடங்கியது. கோட்டை  மாரியம்மன் கோயிலில், ஆகஸ்ட் 5ம் தேதி இரவு சக்தி அழைப்பு நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் வைத்தல், மாவிளக்கு ஊர்வலம் ஆகியவை 7ம் தேதி தொடங்கி, 9ம் தேதி முடிய 3 நாட்களுக்கு நடக்கிறது. பின்னர், 13ம் தேதியன்று, பால்குட விழா, உற்சவர் அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை மற்றும் அன்னதானம் ஆகியவை நடைபெறுகிறது.

Related Stories: