படைவீடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தேர்தல் நடத்த நீதிமன்றம் உத்தரவு

பள்ளிபாளையம், ஜூலை 24:படைவீடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தேர்தல் முறைகேடு தொடர்பான வழக்கில், திமுக வேட்பாளரின் மனுவை ஏற்று, மீண்டும் தேர்தல் நடத்த உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஒன்றியம் படைவீடு அல்லிநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் கோபால்(60). இவர் படைவீடு பேரூர் திமுக தலைவராக பொறுப்பு வகிக்கிறார். படைவீடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் உறுப்பினராக உள்ள கோபால், கடந்த ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதி நடைபெற்ற கூட்டுறவு சங்க தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.  6 பொது பிரிவு வேட்பாளர்களுடன் 11 இயக்குனர்களை தேர்வு செய்ய நடைபெற்ற தேர்தலில், பொது பிரிவு வேட்பாளராக போட்டியிட கோபால் மனு தாக்கல் செய்திருந்தார். இவரது வேட்பாளர் படிவத்தில் வழி மொழிந்த கந்தசாமியின் வங்கி கணக்கு எண் 106ஐ சரியாக குறிப்பிட்ட போதிலும், பரிசீனையின் போது 1106 என மனுவில் இருந்தது. இதை காரணம் காட்டிய தேர்தல் அலுவலர் வங்கி கணக்கு எண் தவறாக குறிப்பிட்டதால், வேட்பு மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். இதையடுத்து பொதுப்பிரிவில் 6 இயக்குனர்களும், பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கான பிரிவில் 5 பேர் தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றனர். வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது குறித்து கோபால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் வழக்கினை விசாரித்தார். இதில் கூட்டுறவு சங்க அதிகாரிகள், தேர்வு செய்யப்பட்ட பொதுபிரிவு இயக்குனர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். பொது பிரிவில் போட்டியின்றி தேர்வு பெற்று இயக்குனர்களாக பொறுப்பேற்ற கந்தசாமி, பழனிசாமி, பெரியசாமி, குப்புராஜ் ஆகியோர் விசாரணையின் போது நேரில் ஆஜரானார்கள். மற்ற இரு இயக்குனர்களால் ஆஜராக முடியவில்லை என கடிதம் கொடுக்கப்பட்டது. கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடு நடந்ததை உறுதி செய்த நீதிமன்றம், இறுதி விசாரணைக்கு பிறகு சங்கத்தின் பொது பிரிவினருக்கு நடந்த தேர்தலை இந்த மாதம் 3ம் தேதி ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது. மேலும் கோபாலின் மனுவை ஏற்றுக்கொண்டு பொது பிரிவினருக்கான தேர்தலை 3 மாதத்திற்குள் முறைப்படி நடத்தி அறிவிக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுக்கான நகல் கோவை, திருப்பூர், நாமக்கல் மாவட்டங்களின் கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Related Stories: