பருவ மழைக்கு முன்னதாக கருவேல மரங்களை அகற்ற வேண்டும்

ராசிபுரம், ஜூலை 24:  பருவ மழைக்கு முன் மாவட்டம் முழுவதும் படர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், நாமகிரிப்பேட்ைட, சேந்தமங்கலம், பரமத்திவேலூர், பள்ளிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நீராதாரத்தை பாதிக்கும் சீமை கருவேல முள் மரங்கள் அதிகம் படர்ந்துகாணப்படுகிறது. நீர்நிலைகள், குளம் மற்றும் குட்டை, காவிரி ஆற்றின் கரையோரம் மற்றும் வனப்பகுதிகளில் இம்மரங்கள் வளர்ந்துள்ளது. கடந்த சில மாதத்திற்கு முன், பல இடங்களில் இந்த சீமை கருவேல மரங்கள் வெட்டி அகற்றப்பட்டது. ஆனாலும் இந்த மரங்கள் தற்போது மீண்டும் வளர்ந்துள்ளது. இந்நிலையில் நடப்பாண்டில் மழை பொய்த்த நிலையில், மாவட்டம் முழுவதும் வறட்சி நிலவியது. இதனால் விவசாயிகள் உழவு பணிகளை மேற்கொள்ள முடியாமல் பாதிக்கப்பட்டனர். தென்னை மற்றும் பாக்கு மரங்கள் காய்ந்து கருகியது. மேலும் குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவியது. குடிநீர்கேட்டு பல்வேறு போராட்டங்கள் பொதுமக்கள் நடத்தியும் உள்ளனர்.இந்நிலையில், வரும் பருவ மழை நாட்களை கருத்தில் கொண்டு குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளின் அருகே வளர்ந்துள்ள சீமை கருவேல முள் மரங்களை வெட்டி அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் நீராதாரம் காக்கப்படும். மேலும் குளங்களில் நீர்வற்றாமல் தடுக்கப்படும். இதில் ராசிபுரத்திற்கு உட்பட்ட பட்டணம், ராசிபுரம் ஏரி, வெண்ணந்தூர், குருசாமிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகமாக உள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், வரும் நாட்களில் பருவ மழைபெய்யும் என்ற நம்பிக்கை உள்ளது. இதனிடையே நீராதாரங்களை காக்கும் பொருட்டு சீமை கருவேல முள் மரங்களை வெட்டிஅகற்ற வேண்டும் என்றனர்.

Related Stories: