அம்மன்கோவில்பதி கிராமத்தில் குடிநீருக்காக 3 கி.மீ காலி குடங்களுடன் அலையும் மக்கள்

போச்சம்பள்ளி, ஜூலை 24: மத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட அம்மன்கோவில்பதி கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் வற்றியதால், நாள்தோறும் குடிநீருக்காக 3 கி.மீ தூரம் மக்கள் காலி குடங்களுடன் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக குடிநீர் பிரச்னையை தீர்க்காவிடில், வரும் 29ம் தேதி மக்களை திரட்டி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் வாணிப்பட்டி ஊராட்சி அம்மன்கோவில்பதி கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு, ஆழ்துளை கிணற்றின் நீரை நிரப்பி, பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக ஆழ்துளை கிணறு வறண்டதால், குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. இதனால், குடிநீர் எடுக்க கிராம மக்கள் 3 கி.மீ தூரமுள்ள திருவணப்பட்டி மற்றும் ஆனந்தூர் கிராமங்களுக்கு சென்று தண்ணீர் எடுத்துவந்து பயன்படுத்தினர். ஆனால், தற்போது அப்பகுதியிலும் குடிநீர் பிரச்னை நிலவுவதால், தண்ணீர் இல்லாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.  குடிநீர் பிரச்னையை தீர்க்கக்கோரி, கடந்த மாதம் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில், அதிகாரிகளிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர். மேலும், மத்தூர் பிடிஓவிடமும் மனு அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கூறுகையில், இப்பகுதியில் ஆழ்துளை கிணறு தண்ணீர் வற்றி வறண்டதால், குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், குடிநீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகிறோம். எனவே, இப்பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னையை தீர்க்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் வரும் 29ம் தேதி அம்மன்கோயில் கூட்ரோட் பகுதியில், கிராம மக்களை திரட்டி உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம் என்றனர்.

Related Stories: