மரக்கன்று அதிகம் நட்டால் தண்ணீர் பிரச்னை தீரும்

தர்மபுரி, ஜூலை 24:  அதிக அளவில் மரக்கன்றுகள் நட்டால், தண்ணீர் பிரச்னை தீரும் என தர்மபுரி மாவட்டத்தில் நீர்மேலாண்மை திட்டத்தை ஆய்வு செய்ய வந்த மத்திய குழு தலைவர் இந்தர் தமீஜா தெரிவித்தார்தர்மபுரி மாவட்டத்தில் நடைபெறும் நீர் மேலாண்மை திட்டம் குறித்து ஆய்வு செய்ய, 9 பேர் கொண்ட மத்திய குழுவினர் நேற்று தர்மபுரிக்கு வந்தனர். இதில் மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் இணைச்செயலாளரும், மத்திய குழு தலைவருமான இந்தர் தமீஜா, வேளாண் ஒத்துழைப்பு, உழவர் நலத்துறை இயக்குநர் ருக்மணி,  குடும்பநலத்துறை அமைச்சக துணை செயலாளர் சரங்கதர் நாயக், வனங்கள் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் துணை செயலாளர் எஸ்கே பரிடா, தொழில்நுட்ப அலுவலர்கள் எம்கே ஜோஸ், ஆறுமுகம், சுக்லா, விஞ்ஞானிகள் ஜோசப், விஜயகுமார் ஆகிய 9 உறுப்பினர்கள் இடம்பெற்றிருந்தனர். இந்த குழுவினர், நீர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு பிரசார வாகனத்தை தொடங்கி வைத்து, மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு குறும்படத்தை பார்வையிட்டனர். பின்னர் தர்மபுரி ஆயுதப்படை மைதானத்தில், பயிற்சி காவலர்கள் மற்றும் காவலர்கள் இணைந்து அமைத்திருந்த மழைநீர் சேகரிப்பு தடுப்பணையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் நல்லம்பள்ளி வட்டம் ஏ.ஜெட்டிஅள்ளி ஊராட்சி காமராஜ் நகரில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டப்பணியாளர்களை கொண்டு, மரக்கன்று நடுதல் திட்டத்தில் 7.05 ஏக்கர் பரப்பளவில் ₹6 லட்சம் மதிப்பீடடில் 2 ஆயிரம் புங்கன், தேக்கு, நாவல், வேம்பு உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு வளர்க்கப்பட்டு வரும் பணியை பார்வையிட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கோயிலில், மழைநீர் சேகரிப்பு அமைக்கப்பட்டதையும் பார்வையிட்டனர்.இந்த ஆய்வுக்கு பின் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நீர் மேலாண்மை திட்டம்,  செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் மலர்விழி முன்னிலை வகித்தார். இதில்  மத்திய குழு தலைவர் இந்தர் தமீஜா தலைமை வகித்து பேசியதாவது:  தர்மபுரி மாவட்டத்தில் இன்று (நேற்று) முதல் வரும் 26ம் தேதி வரை நீர்மேலாண்மை திட்ட பணிகளை ஆய்வு செய்ய உள்ளோம்.  தற்போது மாவட்டத்தில் ஏரிகளில் தூர்வாரும் பணி பரவலாக நடைபெற்று வருகிறது.  மழை நீரை ஏரிகளில் தேக்கி, தண்ணீர் பிரச்னையை தவிர்க்கலாம். வனப்பகுதியில் மட்டுமல்லாமல் அனைத்து பகுதிகளிலும் இன்னும் 5 லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்க்க வேண்டும். அதிக அளவில் மரக்கன்றுகள் நட்டால், தண்ணீர் பிரச்னை தீரும் என்றார்.    இந்நிகழ்ச்சியில் டிஆர்ஓ ரஹமத்துல்லா கான், மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் காளிதாசன், ஆர்டிஓ புண்ணியகோட்டி, தாசில்தார், பிடிஓக்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: