தர்மபுரி மாவட்டத்தில் மதிப்புக்கூட்டும் இயந்திர மையம் அமைக்க விண்ணப்பிக்க அழைப்பு

தர்மபுரி, ஜூலை 24:  தர்மபுரி மாவட்டத்தில் 5 இடத்தில் மதிப்புக்கூட்டும் இயந்திர மையம் அமைக்கப்பட்டு, மரச்செக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தர்மபுரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் மானாவாரி நிலங்களை மேம்படுத்தி, வேளாண் உற்பத்தியினை பெருக்கும் வகையில் நீடித்த மானாவாரி விவசாயத்திற்கான இயக்கம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 2016-2017 முதல் 2019-2020ம் ஆண்டு வரையில், 1000 ஹெக்டர் கொண்ட மானாவாரி நிலத்தொகுப்பு தேர்வு செய்யப்பட்டு, பல்வேறு மேம்பாட்டு பணிகள் ₹802.90 கோடியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 2018-2019ம் நிதியாண்டில் விவசாயிகள் வேளாண் விளைபொருட்களை மதிப்புக்கூட்டி அதிக லாபம் பெறும் வகையில், மதிப்பு கூட்டும் இயந்திர மையங்கள் 75 சதவிகித மானியத்தில் அமைத்திட, முதற்கட்டமாக 25 மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 50 தொகுப்புகளில் அமைக்கப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தின் கீழ் மானாவாரி தொகுப்புகளிலுள்ள உழவர் உற்பத்தியாளர் அமைப்பு அல்லது கூட்டு பண்ணைய திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட, உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு அந்தந்த தொகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் விளைபொருட்களை மதிப்புக் கூட்டுவதற்கான, மதிப்பு கூட்டும் இயந்திர மையங்கள் அமைத்திட மானியம் வழங்கப்படுகிறது. விளைபொருட்களை சுத்தப்படுத்துதல், தரம் பிரித்தல் விற்பனைக்கேற்ற வகையில் பேக்கிங் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான மதிப்புக்கூட்டும், இயந்திரங்கள் கொள்முதல் மற்றும் பணி மூலத்திற்கான மொத்த தொகையில் 75 சதவீதம் அல்லது 10 லட்சம் இதில் எது குறைவோ அத்தொகை அரசு மானியமாக வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் தர்மபுரி மாவட்டத்தில் 5 இடத்தில் மதிப்புக்கூட்டும் இயந்திர மையம் அமைக்கப்பட்டு, பல்வகை எண்ணெய் பிழிந்தெடுக்கும் மரச்செக்குகள் உள்ளிட்ட பல்வேறு இயந்திரங்கள் வாங்கப்பட்டு லாபகரமான முறையில் இயங்கி வருவதால், விவசாயிகளிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. பொதுமக்ககள் தங்கள் தேவைக்கு இந்த மையங்களை அணுகி, மதிப்புக்கூட்டப்பட்ட விளைபொருட்களை பெற்றுக்கொள்ளலாம். மதிப்புக்கூட்டும் இயந்திர மையம் அமைக்க, ஆர்வமுள்ள உழவர் உற்பத்தியாளர் அமைப்பு உழவர் உற்பத்தியாளர் குழு உரிய ஆவணங்களும் சம்மந்தப்பட்ட மானாவாரி தொகுப்பு மேம்பாட்டு குழுவிடம் வழங்க வேண்டும். எனவே இத்திட்டத்தின்கீழ் பயன்பெற ஆர்வமுள்ள உழவர் உற்பத்தியாளர் அமைப்பு மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழு தங்கள் விண்ணப்பத்தினை தொகுப்பு மேம்பாட்டுக்குழுவிற்கு அளித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. செயற்பொறியாளர் (வே.பொறி) மற்றும் உதவி செயற்பொறியாளர், மாவட்ட கலெக்டர், தர்மபுரி, கோவிந்தசாமி நகர், அரூர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளவும் மற்றும் சம்பந்தப்பட்ட வேளாண்மைத்துறையை தொடர்பு கொள்ளவும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: