உயர் விளைச்சலுக்கான பருத்தி சாகுபடி தொழில்நுட்பம் விவசாயிகளுக்கு ஆலோசனை

செந்துறை, ஜூலை 24: உயர் விளைச்சலுக்கான பருத்தி சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.பருத்தி விவசாயிகள் அதிக விளைச்சல் பெற்று லாபமடைய புதிய தொழில்நுட்பங்களை கடைபிடிப்பது மிகவும் அவசியமாகும். முதலில் நிலத்தை அதன் தன்மைகேற்ப உழுது தயார் செய்ய வேண்டும். கடைசி உழவுக்கு முன்பு 12.5டன் மக்கிய தொழுஉரம் மற்றும் எக்டருக்கு 250 கிலோ வேப்பம்புண்ணாக்கு இட வேண்டும். பொதுவாக இறவைபருத்தி ரகங்களுக்கு வரிசைக்கு 75 சென்டி மீட்டர் மற்றும் செடிக்கு 30செ.மீ இடைவெளியும் வீரிய ஒட்டு ரகங்களுக்கு 90 செ.மீ மற்றும் செடிக்கு 45 செ.மீ இடைவெளியும் இட வேண்டும்.இதனால் செடிகளுக்கு தேவையான ஊட்டமும் சூரிய ஒளியும் நன்கு கிடைக்கும், பயிர் நன்கு செழித்து வளரும்.மண் பரிசோதனை செய்யப்படாத நிலையில் பருத்தி ரகங்களுக்கு தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து முறையே 80-40-40 கிலோ எக்டர் மற்றும் வீரிய ஒட்டு ரகங்களுக்கு 120-60-60 கிலோ இட வேண்டும். மேலுரம் இடும்போது பருத்தி செடியில் இருந்து 5 அங்குலம் தூரம் தள்ளி உரமிட்டு களைகொத்தால் மண்ணை கிளறி உரத்தை மூடி வைக்க வேண்டும். இதனால் இடப்பட்ட உரம் வெயிலில் காய்ந்து ஆவியாகி வீணாகாமல் தடுக்கப்படும். விதையளவு வீரிய ஒட்டு ரகங்களுக்கு எக்டேருக்கு 2.5 கிலோ பருத்தி விதைப்பு செய்ய போதுமானது.விதைப்பதற் முன்பு எக்டேருக்கு தேவையான விதையுடன் 3 பாக்கெட் (600 கிராம்) அசோஸ்பைரில்லம் உயிர் உரத்தை அரிசி கஞ்சியுடன் நன்கு கலந்து நிழலில் உலர வைத்து விதை நேர்த்தி செய்து 24 மணி நேரத்திற்குள் விதைப்பு செய்ய வேண்டும்.வீரிய ஒட்டு ரகங்களுக்கு ஒருகுழிக்கு 1 விதை இட வேண்டும். விதைநட்ட 10 நாட்களுக்குள் விதை முளைக்காத இடங்களில் மீண்டும் விதை இட வேம். விதைப்பு செய்த 3ம் நாள் ப்ளுக்குளோரலின் 2.2லி அல்லது பெண்டிமெத்தலின் 3.3லி களைக்கொல்லியை 500 லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் ஒரு எக்டேர் பரப்பளவில் தெளிக்க வேண்டும்.களைக்கொல்லி தெளிக்கும்போது மண்ணில் போதுமான ஈரம் இருக்க வேண்டும். பின்பு விதைப்பு செய்த 35-40 நாட்களில் கைக்கொத்தால் களை எடுக்க வேண்டும். களைக்கொல்லி தெளிக்கப்படாத நிலங்களில் 12-20 நாட்களுக்குள் முதல் களை எடுக்க வேண்டும். விதைநட்ட 45&-50ம் நாள் பரிந்துரைக்கப்பட்ட உரத்தை வீரிய ஒட்டு ரகங்களுக்கு 1க்கு 3பங்கை மேலுரமாகவும் மீதமுள்ள 1க்கு 3பங்கை 75ம் நாளில் இட வேண்டும். சப்பை பிடிக்கும் பருவத்தில் 40 பிபிஎம் ஒரு லிட்டர் நீரில் 40 மி.கிராம் என்ற அளவில் என்ஏஏ பயிர் ஊக்கியை தெளிப்பதன் மூலம் சப்பைகள் மற்றும் காய்கள் உதிர்வதை தடுக்கலாம்.ஒருமாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் தெளிக்க வேண்டும். இதனால் சப்பை உதிராமல் அதிக காய்கள் பிடித்து நல்ல விளைச்சல் கொடுக்கும். விதைப்பு செய்த 70-90 நாட்களுக்குள் செடியில் (20வது கணு) நுணிகிள்ளுதல் செய்ய வேண்டும். மேற்கூறிய சாகுபடி தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதன் மூலம் பருத்தி சாகுபடியில் அதிக விளைச்சல் மற்றும் லாபம் பெறலாம். இவ்வாறு செந்துறை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் நாகராஜ் தெரிவித்துள்ளார்.

Related Stories: