பொதுமக்கள் கோரிக்கை உடையார்பாளையம் பேரூராட்சியில் கழிவுநீர் வாய்க்காலை ஆக்கிரமித்து முட்புதர் மண்டி கிடக்கும் அவலம்

ஜெயங்கொண்டம், ஜூலை 23: உடையார்பாளையம் பேரூராட்சியில் கழிவுநீர் வாய்க்காலை ஆக்கிரமித்து முட்புதர்கள் மண்டி கிடக்கிறது. இதனால் வாய்க்காலில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் நோய் தொற்று ஏற்படும் அபாயத்தில் பொதுமக்கள் உள்ளனர்.அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த உடையார்பாளையம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் உடையார்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட 6வது வார்டு பழைய காவல் நிலையம் தெரு உள்ளிட்ட பல தெருக்களில் கழிவுநீர் வரத்து வாய்க்கால் ஓடை செல்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்த வாய்க்கால் சீரமைக்கும் பணி நடந்தது. அப்போது பாதி பணி முடிந்தும், மீதமுள்ள பணிகளை முடிக்காமல் கிடப்பில் போட்டனர்.இதனால் போதிய பராமரிப்பின்றி கேட்பாரற்று இந்த வாய்க்கால் கிடந்ததால் முட்புதர்கள் மண்டி வாய்க்காலை ஆக்கிரமித்துள்ளது. இதன் காரணமாக கழிவுநீர் மற்றும் மழைநீர் தடைபட்டு ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் கடுமையான துர்நாற்றம் அடித்து நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.இந்த கழிவு வாய்க்கால் அருகில் தான் உடையார்பாளையம் பேரூராட்சி அலுவலகம் உள்ளது. மேலும் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதி, அரசு மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு மருத்துவமனை, சார்பதிவாளர் அலுவலகம், சிவன் மற்றும் பெருமாள் கோயில்கள் என பொதுமக்கள் அதிகளவில் வந்து போகும் பகுதியாக உள்ளது. தற்போது பருவமழை துவங்க உள்ளதால் தொற்று நோய் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்.எனவே மழை காலத்துக்கு முன்பாகவே சுகாதார சீர்கேட்டை உண்டாக்கும் கழிவுநீர் வரத்து வாய்க்காலை சீரமைத்து அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: