அன்னமங்கலத்தில் டாஸ்மாக் கடை திறக்க அனுமதிக்ககூடாது

பெரம்பலூர், ஜூலை 23: அன்னமங்கலம் கிராமத்தில் மீண்டும் டாஸ்மாக் கடையை திறக்க அனுமதிக்கக்கூடாது என்று பெரம்பலூரில் நடந்த குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் சாந்தா தலைமை வகித்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். வேப்பந்தட்டை தாலுகா அன்னமங்கலம் ஊராட்சி தனப்பிரகாசம்நகர் பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் சாலமன் என்பவர் தலைமையில் வந்து கோரிக்கை மனு அளித்தனர்.அதில் அன்னமங்கலம் கிராமத்துக்கு தமிழக அரசின் டாஸ்மாக் கடை தேவையில்லை. இங்குள்ள தனப்பிரகாசம் நகர் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க உள்ளதாக தெரிய வருகிறது. அதற்கான கட்டிட பணியும் நடந்து வருகிறது. எங்களது கிராமம் தற்போது தான் விபத்து, வழிப்பறி திருட்டு, சண்டை சச்சரவுகள் இல்லாமல் இருந்து வருகிறது.பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் நிம்மதியாக கல்வி கற்க சென்று வருகின்றனர். எங்கள் ஊரில் வனப்பகுதி மிகுந்துள்ளதால் சில அசம்பாவிதங்கள் நடப்பதை தவிர்ப்பதற்காக டாஸ்மாக் கடையை திறக்க வேண்டாம் என்பது எங்களது கோரிக்கையாகும். எனவே டாஸ்மாக் கடை திறக்க அனுமதி வழங்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: