ஹெல்மெட் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கு விபத்து வீடியோ காண்பித்து அட்வைஸ்

பெரம்பலூர், ஜூலை 23: உயர்நீதி மன்றமும், தமிழக அரசும் மாறிமாறி இருசக்கர வாகன ஓட்டிகள் வாகனங்களில் செல்லும்போது கட்டாயம் தலையில் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டுமென வலியுறுத்தி வருகிறது. ஆனால் பெரும்பாலானோர் கண்டுகொள்வதில்லை. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் போக்குவரத்து காவல்துறை மூலம் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த வீடியோபட காட்சிகள் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு போட்டு காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக காவல்துறை தலைவரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதையொட்டி நேற்று பெரம்பலூர் எஸ்பி திஷாமித்தல் உத்தரவின்பேரில் நகர போக்குவரத்து காவல்துறை இன்ஸ்பெக்டர் சவுந்தர்ராஜன் தலைமையிலான காவலர்கள் பாலக்கரை பகுதியில் திடீர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணியாமல் சென்றபோது ஏற்பட்ட விபத்துகளின் காவல்துறை சிசிடிவி பதிவுகளை ஒளிபரப்பி காண செய்தனர். அதில் சிறுசிறு விபத்துகளில்கூட மூளை சிதறுண்டு பலியான இளைஞர்களை கண்டு இருசக்கர வாகன ஓட்டிகள் கண்டு ஹெல்மெட் அவசியத்தை புரிந்துகொண்டு சில தினங்களில் ஹெல்மெட் வாங்கி அணிந்து செல்வதாக பேசியுள்ளனர்.பேரணி நடத்துதல், துண்டு பிரசுரங்களை விநியோகம்செய்தலைவிட இதுபோன்ற வீடியோ காட்சிகள் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு எளிதில் ஹெல்மெட் அவசியத்தை விளக்கியதால் திரையரங்குகளில் இதுபோன்ற காவல்துறையின் வீடியோ விழிப்புணர்வு காட்சிகளை ஒளிபரப்ப வேண்டுமென இருசக்கர வாகன ஓட்டிகள் பலரும் கேட்டு கொண்டனர்.

Related Stories: