தியாகராஜ சுவாமி கோயில் அலுவலகம் எதிரே சேதமான நடைபாதை மண்டபத்தால் பக்தர்கள் கடும் அவதி

திருவாரூர், ஜூலை 24: திருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலின் அலுவலர் அலுவலகம் எதிரே உள்ள நடைபாதை மண்டபத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாக இருந்து வரும் தியாகராஜசுவாமி கோயிலானது சைவசமயத்தின் தலைமைபீடமாகவும், பிறக்க முக்தியளிக்கும் ஸ்தலமாகவும் , சமய குறவர்கள் நால்வராலும் பாடல் பெற்ற ஸ்தலமாகவும் தலமாகவும் இருந்து வருகிறது. மேலும் கோயில் 5 வேலி, குளம் 5 வேலி, ஓடை 5 வேலி பரப்பளவு கொண்டது என சிறப்பு வாய்ந்த இக்கோயிலின் மூலவராக வன்மீகநாதரும்,உற்ச்சவராக தியாகராஜரும் இருந்து வரும் நிலையில் இக்கோயிலின் ஆழித்தேரானது ஆசிய கண்டத்திலேயே 2வது மிகப்பெரிய தேர் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. கோயிலின் விழாக்களில் பங்குனி உத்திர விழாவானது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டமும் அதன் பின்னர் கோயிலின் மேற்கு புறத்தில் உள்ள கமலாலய குளத்தில் தெப்ப திருவிழாவும் நடைப்பெறுவது வழக்கம். இந்த திருவிழாக்களில் லட்ச கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்நிலையில் கோயிலின் மேற்கு கோபுரம் உள்ளே நிர்வாக அலுவலர் அலுவலகம் இருந்து வருகிறது. இந்த அலுவலகத்திற்கு எதிரே பக்தர்கள் செல்லும் நடைபாதை மண்டபமும், அந்த மண்டபத்தின் உள்ளே படிப்பகமும் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த மண்டபமானது கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் மேல்பகுதியில் கீறல் விழுந்தவாறு சேதமடைந்துள்ளது.இதையடுத்து கடந்த 4 மாதத்திற்கும் மேலாக இந்த நடைபாதை மண்டபத்தின் வழிகள் அடைக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி படிப்பகமும் மூடப்பட்டுவிட்டது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் நிர்வாக அலுவலகம் வழியாக செல்ல வேண்டிய நிலை உள்ளதால் அதிக படிகளை கொண்ட இந்த அலுவலகத்தின் பாதையில் ஏறி, இறங்குவதற்கு வயதான பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து கோயில் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் இந்த மண்டபத்தினை சீரமைப்பது குறித்து தொல்பொருள் ஆராய்ச்சி கழகத்தினர் நேரில் வந்து பார்வையிட்டு சென்றுள்ளதாகவும், அவர்களிடமிருந்து அனுமதி கிடைத்தவுடன் இதற்கான மதிப்பீடு தயார் செய்யப்பட்டு பணிகள் நடைபெறும் என்றும் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: