திருச்சி முக்கொம்பில் ரூ.387.60 கோடியில் புதிய மேலணை, தற்காலிக தடுப்பணை பணிகள் அரசு முதன்மை செயலர் நேரில் ஆய்வு

திருச்சி, ஜூலை 24: முக்கொம்பில் ரூ.387.60 கோடியில் புதிய மேலணை அமைக்கும் பணி மற்றும் தற்காலிக தடுப்பணை ரூ.38.85 கோடியில் பலப்படுத்தும் பணி நடைபெற்று வருவதை பொதுப்பணித்துறை அரசு முதன்மைச் செயலர் பிரபாகர் நேற்று ஆய்வு செய்தார்.இது குறித்து கலெக்டர் சிவராசு கூறியதாவது: மேலணையில் ரூ.38.85 கோடியில் தற்காலிக தடுப்பணை அமைக்கும் பணி கடந்த பிப்.27ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இப்பணி ஆக.20ம் தேதிக்குள் முடிக்கப்படும். மேலணையில் 210 மீ. உடைப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தம் 630 மீ. நீளத்திற்கு புதிய மேலணை அமைக்கப்பட உள்ளது. இந்த புதிய மேலணை அமைக்க 484 பைல்கள் அமைக்கப்பட உள்ளது. தற்போது வரை 70 பைல்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பைல் 18 மீ. ஆழத்தில் அமைக்கப்படுகிறது. புதிய மேலணை அமைக்க கடந்த 2018 டிச.6ம் தேதி ரூ.387.60 கோடியை அரசு ஒதுக்கீடு செய்தது. சேதமடைந்த மேலணைக்கு கீழ்ப்புறத்தில் 75 மீ. தொலைவில் அமைக்கப்படுகிறது. தெற்கு கொள்ளிடம் கதவணை 45 கண்வாய்களுடனும், வடக்கு கொள்ளிடம் கதவணை 10 கண்வாய்களுடனும் அமையவுள்ளது. ஒவ்வொரு அகத்தூண்களுக்கு 8 பைல்களுடனும், புறத்தூண்களுக்கு 15 பைல்களுடனும் கூடிய அஸ்திவாரம் அமைக்கப்படவுள்ளது. கசிவில்லாச் சுவர்கள் நவீன தொழில்நுட்பத்துடன் அமைக்கப்படவுள்ளது. இப்பணிகள் அனைத்தும் முழுமையாக 2021ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. புதிய கதவணை பணிகள் நிறைவுற்று பயன்பாட்டிற்கு வரும் வரை, தொடர்ந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் வழங்கவும், எதிர்பாராத வெள்ளம் ஏற்படின் அதனை பாதுகாப்பாக வெளியேற்றவும், சேதமடைந்த மேலணையை பலப்படுத்திடவும் பணிகள் நடைபெற்று வருகிறது. சேதமடைந்த பகுதியின் மேற்புறம் சீட் பைல்களுடன் காப்பணை அமைத்திடவும், கீழ்புறம் முழு நீளத்திற்கும் கூடுதல் கசிவில்லாச்சுவர் அமைக்கவும், மேலும் கூடுதல் கான்கரீட் தரைதளம் அமைக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றார்.

ஆய்வின்போது பொதுப்பணித்துறை மண்டல தலைமைப் பொறியாளர் ராமமூர்த்தி, பொதுப்பணித்துறை ஆற்றுப்பாதுகாப்பு கோட்ட செயற்பொறியாளர் பாஸ்கர், கண்காணிப்புப் பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர்கள் ஜெயராமன், சிவக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: