போதையில் தேஜஸ் ரயிலை மறித்த வாலிபர் திருச்சி ஜங்ஷனில் பரபரப்பு

திருச்சி, ஜூலை 24: திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதுபோல் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஜங்ஷன் ரயில் நிலையத்தை ஏராளமான ரயில்கள் கடந்து செல்கிறது. இதனால் இந்த ரயில் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்காக பயணிகள் வந்து செல்கின்றனர். இதில் மதுரையில் இருந்து சென்னைக்கு தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் வியாழன் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் வழக்கம்போல் நேற்று மதியம் மதுரையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு வந்தது. மாலை 4.55 மணிக்கு திருச்சி 2வது பிளாட்பாரம் வந்த ரயில் பயணிகளை இறக்கிவிட்டு மீண்டும் சென்னை நோக்கி புறப்படுகையில் இன்ஜின் டிரைவர் ரயிலை மெதுவாக இயக்கினார். அப்போது, பிளாட்பாரத்தில் குதித்த 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தண்டவாளத்தில் நின்று ரயிலை மறித்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த இன்ஜின் டிரைவர் பிரேக் போட்டு ரயிலை நிறுத்தினார். இதனால் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே போலீசார் மற்றும் பாதுகாப்பு படை போலீசார் அங்கு சென்று வாலிபரை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் வாலிபர் அதிக போதையில் இருந்ததும் என்ன செய்வதென தெரியாமல் செய்ததாக கூறி கதறி அழுதார். இதையடுத்து போதை வாலிபரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தினால் தேஜஸ் ரயில் 10 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

Related Stories: