உரிய இழப்பீடு வழங்க கோரி நாகை-விழுப்புரம் நெடுஞ்சாலைக்கு நிலம் கொடுத்தவர்கள் ஆர்ப்பாட்டம்

நாகை, ஜூலை24: நாகை விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை அமைய நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி நாகை புத்துர் ரவுண்டானாவில் நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

நாகை எம்எல்ஏ தமிமூன்அன்சாரி தலைமை வகித்தார். தேசிய நெடுஞ்சாலை 45 ஏ சாலை விரிவாக்கத்தால் பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள் சங்க தலைவர் சாகுல்ஹமீது, செயலாளர் கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நாகை விழுப்புரம் 4 வழிச் சாலை அமைய கொடுக்கப்பட்ட நிலத்திற்கு உரிய இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும். 4 வழிச்சாலை அமைய நிலம், இடம், வீடு ஆகியவற்றை கொடுத்து பாதிக்கப்பட்ட பொதுமக்களை அழைத்து பேசி உரிய இழப்பீடு வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.அப்போது நாகை எம்எல்ஏ தமிமூன்அன்சாரி கூறியதாவது:நாகை விழுப்புரம் நான்கு வழி சாலை திட்டத்தை பொதுமக்கள் யாரும் எதிர்க்கவில்லை. நிலம் வழங்கியவர்களுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று தான் கேட்கிறார்கள். இந்த சாலை அமைய நிலம் கொடுத்ததில் ஒரு சில இடங்களில் சதுர அடிக்கு ரூ.400, ஒரு சில இடங்களில் சதுர அடிக்கு ரூ.40 என்று பாகுபாடு காட்டி நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு பாகுபாடு காட்டி மோசடி செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலை அமைய நிலத்தை கொடுத்து தவிக்கும் பொதுமக்கள் கேட்கும் சந்தை வழிகாட்டு மதிப்பை விட 4 சதவீதம் கூடுதல் இழப்பீடு தொகையை வழங்க வேண்டும். மேலும் இது தொடர்பாக தமிழக முதல்வர் பாதிக்கப்பட்ட மக்களை அழைத்து பேச வேண்டும். அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். முதல்வர் பேசவில்லை என்றால் நாகை விழுப்புரம் நான்கு வழிச்சாலை அமைய நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட மக்களின் சிலரை அழைத்துக் கொண்டு நான் முதல்வரை சந்தித்து மனு கொடுக்க உள்ளேன் என்றார்.

Related Stories: