சங்க தலைவர் மீது அரசு நடவடிக்கையை கண்டித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

நாகை, ஜூலை 24: பணி ஓய்வுபெறும் நிலையில் இருந்த தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநிலத்தலைவர் சுப்பிரமணியன் மீது தமிழக அரசு எடுத்த நடவடிக்கையை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நேற்று நடந்தது.நாகை வட்டத் தலைவர் குமரேசன் தலைமை வகித்தார். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் விருதுநகர் மாவட்டம் அருப்புகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றினார். அவர் கடந்த மே மாதம் 31ம் தேதி ஓய்வுபெறும் நாளில் விருதுநகர் கலெக்டர் சுப்பிரமணியனை தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளார். பணி ஓய்வுபெறும் நாளில் அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை திரும்ப பெற வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வட்ட செயலாளர் மணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கொள்ளிடம்:கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு ஊராக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் வட்டார தலைவர் செந்தில்குமார் தலைமை யில் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. நேற்று காலை முதல் மாலை வரை 42 ஊராட்சிகளை சேர்ந்த ஊராட்சி செயலாளர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டதால் ஊராட்சிகளில் நேற்று நடைபெற வேண்டிய அனைத்து பணிகளும் பாதிக்கப்பட்டது. கொள்ளிடம் ஒன்றியத்தில் அனைத்து அலுவலர்கள் மட்டும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அனைத்து பணிகளும் முடங்கின. போராட்டத்தில் வட்டார செயலாளர் சிங்காரவேலு, மாநில செயலாளர் சவுந்தரபாண்டியன், மாநில செயற்குழு உறுப்பினர் வேல்கண்ணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். வட்டார பொருளாளர் ரமேஷ், துணை தலைவர் நாகராஜன், தணிக்கையாளர் கவிதா மற்றும் ஊரக வளர்ச்சி துறை சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

வேதாரண்யம்:வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலக சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். பின்னர் கோரிக்கை அடங்கிய மனுவை அரசுக்கு அனுப்புவதற்கு கையெழுத்து இயக்கமும் நடத்தினர். இப்போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: