கிசான் கடன் அட்டை பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் கரூர் கலெக்டர் அறிவிப்பு

கரூர், ஜூலை 24: விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டை வழங்கும் திட்டம் குறித்து கலெக்டர் அன்பழகன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:கிசான் கடன் அட்டை வழங்கும் திட்டம் 1998ம் ஆண்டு முதல் இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகள் பயிர் சாகுபடி செய்யத் தேவையான விவசாய இடுபொருட்களான விதைகள், உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகள் வாங்குவதற்கு தேவையான விவசாய கடன் உதவி, கிசான் கடன் அட்டை மூலம் ரூ. 1லட்சம் வரை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தமிழ்நாடு கிராம வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது கிசான் கடன் அட்டை மூலம் வழங்கப்படும் கடன் உதவி பிணையம் ஏதுமின்றி அதிகபட்சமாக ரூ. 1 லட்சதது 60ஆயிரம் வரை உயர்த்தி வழங்க அரசு நிர்ணயம் செய்துள்ளது. கரூர் மாவட்டத்தில் 1,29,924 விவசாய குடும்பங்களில் ஏற்கனவே கிசான் கடன் அட்டை பெற்ற விவசாயிகள் போக மீதமுள்ள விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டை வழங்க தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தமிழ்நாடு கிராம வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் வாரியாக முகாம் நடத்தி விவசாயிகளிடம் இருந்து விண்ணப்ப படிவத்தினை பெற்று விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டை வழங்க மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்துள்ளது.அனைத்து வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுடன் இணைந்து வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறையின் மூலமாக விழிப்புணர்வு முகாம் வருவாய் கிராமங்கள் வாரியாக நடத்தப்படவுள்ளன. எனவே விவசாயிகள் அனைவரும் விண்ணப்பத்துடன் தங்கள் பகுதிக்குட்பட்ட வங்கிகள் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களை அணுகி கிசான் கடன் அட்டை பெற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: