தோகைமலை ஆலத்தூரில் சிறப்பு மருத்துவ முகாம்

தோகைமலை,ஜூலை24: தோகைமலை அருகே ஆலத்தூரில் நடந்த சிறப்பு மருத்துவ முகாமில் 946 பேர் சிகிச்சை பெற்று பயன் அடைந்தனர்.கரூர் மாவட்டம் சேப்ளாப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. ஆலத்தூர் அரசு தொடக்கப் பள்ளியில் நடந்த முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் தியாகராஜன் தலைமை வகித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கி பேசினார். பிடிஏ தலைவர்கள் தர்மர், தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தொடர்ந்து முகாமில் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, எச்ஐவி, கொழுப்பின் அளவு, ஈசிஜி ஸ்கேன், சளி, இருதய நோய் கண்டறிதல், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், கண்புரை உட்பட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டு 946 நபர்களுக்கு சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக 7 பேரை பரிந்துரை செய்யப்பட்டனர். மேலும் கர்ப்பிணி பெண்களுக்கான நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. முகாமில் மருத்துவ அலுவலர்கள் வள்ளி, தாரா, சரண்யா, கார்த்திகேயன், சித்த மருத்துவர்கள் சாரல்சோபியா, சுப்புலெட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர். இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராமசாமி, சுகாதார ஆய்வாளர் பொன்னுச்சாமி, ஊராட்சி செயலாளர் வரதராஜன் உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: