அனைத்து ரேஷன் அட்டைக்கும் மீண்டும் இலவச அரிசி

புதுச்சேரி, ஜூலை 24:  அனைவருக்கும் இலவச அரிசி வழங்கும் கோப்புக்கு கிரண்பேடி அனுமதியளிக்க மறுத்துவிட்டார். அதன்படி வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு மட்டும் இலவச அரிசி வழங்கப்படுகிறது.  புதுச்சேரியில் சிவப்பு நிற அட்டைக்கு மட்டும் 20 கிலோவும், மஞ்சள் அட்டைக்கு 10 கிலோவுக்கு பதிலாக பணமாக வழங்கப்படுகிறது. ஆனால் மக்கள் பணத்துக்கு பதிலாக அரிசியை விரும்புகிறார்கள் எனக்கூறி கவர்னருக்கு  மீண்டும் கோப்புகள் அனுப்பப்பட்டும் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் சட்டசபையில்,  இது தொடர்பான  பிரச்னையை எழுப்பி அதிமுக உறுப்பினர் அன்பழகன் பேசுகையில்,  நேற்று சட்டமன்ற கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, மாலையில்  அமைச்சரவை கூட்டம்  கூட்டப்பட்டதன் நோக்கம் என்ன? மின்சார கட்டணத்தை குறைக்க போகிறீர்களா? உயர்த்தப்பட்ட வரிகளை குறைக்கும் எண்ணம் அரசுக்கு உண்டா? என்ன முடிவு எடுத்தீர்கள்?  இலவச அரிசி சம்பந்தமாக எடுக்கப்பட்ட முடிவுகளை சட்டசபையில் தெரிவிக்க வேண்டும். என்றார்.அமைச்சர் கந்தசாமி:ஏற்கனவே 3 மாதம் அரிசி போடுவதற்கு ஒப்புதல் பெறப்பட்டு, அதில் சிவப்பு ரேஷன் அட்டைக்கு 2 மாத அரிசி போடப்பட்டுள்ளது. மீதம் உள்ள ஒரு மாத அரிசி போடப்படும். அதேபோல் மஞ்சள் நிற ரேஷன் அட்டைக்கு 3 மாதத்துக்கு பணம் வழங்கப்பட்டு வருகிறது. அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி வரும்  செப்டம்பர் மாதம் முதல்  அனைத்து ரேஷன் அட்டைக்கும் இலவச அரிசி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. என்றார்.   இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

Related Stories: