ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறுத்தும் வரை போராட்டம்

புதுச்சேரி, ஜூலை 24: சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த வேண்டாம் என மத்திய அரசை வலியுறுத்தி அரசு தீர்மானமாக புதுவை சட்டசபையில் நேற்று கொண்டுவரப்பட்டு அது குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, தீர்மானத்தின் மீது எம்எல்ஏக்கள் பேசியதாவது: சங்கர் (பாஜக):  ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஏதோ பூகம்பம், பூதம் வந்ததுபோல் ஒரு பிரம்மையை ஏற்படுத்துகிறார்கள். எந்தவொரு திட்டமாக இருந்தாலும் பாதிப்பு இருக்கத்தான் செய்யும். (தொடர்ந்து, ஹைட்ரோ கார்பன் குறித்து அறிவியல் ரீதியாக பேசிக் கொண்டே இருந்தார்). அமைச்சர் கந்தசாமி:  புதுச்சேரி சிறிய மாநிலம். இத்திட்டத்தால் பாதிப்பு அதிகம் ஏற்படும். தீர்மானத்தை ஆதரிக்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? அதை நேரடியாக சொல்லுங்கள். முதல்வர் நாராயணசாமி:  விவசாயிகள் போராட்டம் நடத்துகிறார்களே. ஏன் இத்திட்டத்தை மத்திய அரசு நிறுத்தவில்லை? அரசு கொறடா அனந்தராமன்: புதுச்சேரியில் ஒட்டுமொத்த மக்களும் இத்திட்டத்தை எதிர்க்கிறார்கள். மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். இத்திட்டத்தை நீங்கள் (பாஜக) ஆதரிக்கிறீர்களா? இல்லையா? சங்கர்:  தீர்மானத்தில் தமிழகப் பகுதிகளையும் குறிப்பிட்டுள்ளீர்கள். அது ஏன்?

அமைச்சர் நமச்சிவாயம்: தமிழகத்தில் பாதிப்பு ஏற்பட்டால், அதை ஒட்டியுள்ள புதுச்சேரிக்கும் பாதிப்பு ஏற்படும். செல்வகணபதி (பாஜக): உறுப்பினர் சங்கர், கெமிக்கல் இன்ஜினியரிங் முடித்திருப்பதால் ஹைட்ரோ கார்பன் பற்றி விரிவாக பேசுகிறார். அனந்தராமன்: நான் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்திருக்கிறேன். எனக்கு தெரியாதா? பாலன் (காங்):  ஹைட்ரோ கார்பன் திட்டம் புதுச்சேரிக்கு கொண்டு வரணுமா? வேண்டா? அதை உறுப்பினர் சங்கர் முதலில் கூறட்டும்.

சங்கர்:  இத்திட்டத்தில் அந்நிய நாட்டு சதிகள் இருக்கிறதோ? என்ற பயம் ஏற்படுகிறது. அமைச்சர் நமச்சிவாயம்:  அந்நிய நாட்டுக்கு நீங்கள் தான் அடிக்கடி போய்ட்டு வருகிறீர்கள். சங்கர்:  எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அறிவியல் பூர்வமாக பாதிப்பு இருப்பது பற்றி தெரிவித்தால் அதனை எதிர்க்கும் முதல் ஆளாக நானாக இருப்பேன். தனவேலு (காங்.):  பாகூர் பகுதியில் 24 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்போவதாக கூறப்படுகிறது. இத்திட்டத்தால் நன்மைகளை விட தீமைகள் தான் அதிகம். நெற்களஞ்சியமான பாகூரில் இத்திட்டத்தால் விவசாயம் பாதிக்கும். ஆகையால் இத்திட்டத்தை கொண்டுவரக் கூடாது என ஊரை திரட்டி போராட்டம் நடத்துவேன்.

அசனா (அதிமுக):  நெற்களஞ்சியமாக விளங்கும் காரைக்காலில் இத்திட்டத்தால் விவசாயம் முழுவதும் பாதிக்கப்படும். சாமிநாதன் (பாஜக):  பாதிக்கும் என இத்திட்டம் பற்றி ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தீர்களா? உண்மையில் பாதிக்கும் என்றால் கண்டிப்பாக நாங்கள் எதிர்ப்போம். மாநில நலன் தான் முக்கியம். எனக்கு புரியவில்லை. பாதிப்பு என எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள்? பாதிப்பா, இல்லையா? என எனக்கு புரிதல் இல்லை. பாலன்:  புதுச்சேரி சின்ன மாநிலம், விவசாயம் கொஞ்சம் தான் நடக்கிறது. இருக்கிற இடத்தில் மக்கள் வாழ்கிறார்கள். இந்த இடத்திற்கு இத்திட்டம் தேவையில்லை. இருக்கின்ற நல்ல நீரும் பாதிக்கப்படக்கூடாது. தமிழகத்தில் ஏற்கனவே நீர் பாதிக்கப்பட்டுவிட்டது. அந்த நிலை புதுச்சேரிக்கு வந்துவிட கூடாது. ஆகையால் இந்த தீர்மானத்தை ஆதரிக்கிறேன். விஜயவேணி (காங்.):  இத்திட்டம், புதுச்சேரிக்கு ரொம்பவும் பாதிப்பை ஏற்படுத்தும். உயிர்சேதமும் அதிகம் ஏற்படும். சந்திர பிரியங்கா (என்ஆர் காங்.,):  காவிரி டெல்டா பகுதிக்கு இத்திட்டம் ஒத்து வராது. எனது நெடுங்காடு கோட்டுச்சேரி விவசாய பகுதி. இத்திட்டம் எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இத்திட்டத்தை வேண்டாம் என நிறைய நாடுகள் தடை போட்டுள்ளன. எனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலத்தினுள் எரிவாயு பைப் அமைக்கும் நிறுவனங்கள் அலுவலகங்கள் அமைத்துள்ளன. அதனை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஆய்வு செய்ய வேண்டும். இதற்காக கமிட்டி அமைக்க வேண்டும். அதில் அந்தந்த பகுதி எம்எல்ஏக்களை உறுப்பினராக சேர்க்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உண்மையிலேயே நிறுத்த வேண்டும். கீதா ஆனந்தன் (திமுக):  இத்திட்டம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். கேஸ், கதிர்வீச்சு வெளிப்படும், புற்றுநோய் ஏற்படும். மீனவர்கள், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும். இத்திட்டத்தை தொடங்கும் முன் ஆரம்பத்திலே அழிக்க வேண்டும்.

வெங்கடேசன் (திமுக):  இத்திட்டத்தால் விவசாயிகள், மீனவர்கள் அதிகமாக பாதிக்கப்படுவர். மக்களை பாதிக்கும் திட்டத்தை கொண்டுவரக் கூடாது. இத்திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டியது நமது கடமை.ஜெயமூர்த்தி (காங்.):  புதுச்சேரி மண்ணுக்கு கேடு விளைவிக்கும் திட்டம் இது. எதிர்கால சந்ததிகளை பாதிக்கும், விவசாயத்தை பாதிக்கும். இத்திட்டத்தை மத்திய அரசு நிறுத்தும் வரை, நான் இறுதி மூச்சு வரை போராடுவேன்.அனந்தராமன்:  புதுச்சேரி, காரைக்காலில் இத்திட்டத்தை முற்றிலும் செயல்படுத்தக் கூடாது. மத்திய அரசு, வேதாந்தா நிறுவனத்துக்கு அளித்துள்ள ஒப்பந்தத்தை திரும்பபெற வேண்டும். பணத்துக்காகவே இத்திட்டத்தை மத்திய அரசு கொண்டு வருகிறது. இவ்வாறு விவாதம் நடந்தது.

Related Stories: