அதிமுக உறுப்பினர் பேசியது அவை குறிப்பில் இருந்து நீக்கம்

புதுச்சேரி, ஜூலை 24:  புதுவை சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் 2ம் நாளான நேற்று, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தினை செயல்படுத்த வேண்டாம் என மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தின் மீது எம்எல்ஏக்கள் தங்களது கருத்தினை பதிவு செய்தனர். இதில் அதிமுக சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் பேசியதாவது: ஹைட்ரோ கார்பன் திட்டம் சம்பந்தமாக கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தில் தேவையில்லாமல் தமிழகப் பகுதியான நாகப்பட்டினம், விழுப்புரம் ஆகிய இடங்களை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் குறித்து தமிழக அரசு தெளிவான ஒரு முடிவினை சட்டமன்றத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகமும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் அறிவித்துள்ளனர். அதில் தமிழகத்தைப் பொருத்தவரை ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எந்த நிலையிலும், எப்போதும் தமிழக அரசு அனுமதி வழங்காது. மத்திய அரசு அனுமதி கொடுத்திருந்தாலும் ஹைட்ரோ கார்பன் தொடர்பாக ஆய்வு செய்யவோ, எடுக்கவோ தமிழக அரசு அனுமதி தரவில்லை. எந்த சூழ்நிலையிலும் அனுமதியும் வழங்க மாட்டோம். மீறி யாரேனும் எடுத்தால் அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும் என்று தமிழக சட்டசபையில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் உறுதியாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர், தமிழக எதிர்க்கட்சி தலைவர் பற்றியும், மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது கொண்டுவந்த திட்டங்கள் குறித்தும் விமர்சனம் செய்தார். இதற்கு திமுக சட்டமன்ற கட்சி தலைவர் சிவா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தீர்மானத்தை ஆதரிக்கிறீர்களா? இல்லையா? என்பதை பற்றி பேசாமல் ஏன் சுத்தி, சுத்தி பேசுகிறீர்கள்? என்றார். இதனால் அன்பழகனுக்கும், சிவாவுக்கும் கடும் வார்த்தைப்போர் ஏற்பட்டது. அன்பழகனின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு கொறடா அனந்தராமன், பொய்யான தகவல்களை சபையில் தெரிவிக்க வேண்டாம் என்றார். அப்போது அன்பழகனுடன், அதிமுக எம்எல்ஏக்கள் அசனா, பாஸ்கர், என்ஆர் காங்., ஜெயபால், சந்திர பிரியங்கா, பாஜக நியமன எம்எல்ஏக்கள் சாமிநாதன், செல்வகணபதி, சங்கர் ஆகியோர் ஒருசேர எழுந்து பேச தொடங்கினர். இதனால் சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. சிவா எம்எல்ஏ: தமிழக எதிர்க்கட்சி தலைவர் பற்றி அன்பழகன் பேசிய பேச்சு அனைத்தையும் அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும். என்றார்.முதல்வர் நாராயணசாமி: தமிழக தலைவர்கள் பற்றி பேசிய அனைத்தையும் நீக்க வேண்டும். என்றார்.அமைச்சர் கமலக்கண்ணன்: திமுக தலைவர் பற்றியும், சபையில் இல்லாத நபரை பற்றியும் பேசிய அனைத்தையும் நீக்க வேண்டும். என்றார். இதையடுத்து, தமிழக எதிர்க்கட்சி தலைவர் பற்றி அன்பழகன் பேசிய அனைத்தையும் அவை குறிப்பில் இருந்து நீக்குவதாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார். இதனை கண்டித்து அன்பழகன் வெளிநடப்பு செய்தார். அவருடன் அதிமுக உறுப்பினர்கள் அசனா, பாஸ்கர், என்ஆர் காங்., ஜெயபால், சந்திர பிரியங்கா, பாஜக சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: