சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த வேண்டாம்

புதுச்சேரி, ஜூலை 24: புதுவை சிறப்பு சட்டசபையில் 2ம் நாளான நேற்று, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தினை செயல்படுத்த வேண்டாம் என மத்திய அரசை கேட்டுக் கொள்ளும் அரசினர் தீர்மானத்தை முதல்வர் நாராயணசாமி முன்மொழிந்து பேசியதாவது: புதுச்சேரி மற்றும் தமிழகப் பகுதிகளில் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க தனியார் நிறுவனத்துடன் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும், இதற்கான சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த அறிக்கை தயார் செய்ய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. தனியார் நிறுவனம் நாகப்பட்டினம், காரைக்கால், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் சுமார் 339 சதுர கி.மீ. பரப்பளவிலும், கடல் பகுதியில் சுமார் 4,047 சதுர கி.மீ பரப்பளவிலும் இந்த எரிவாயு கிணறுகளை அமைக்கவுள்ளது. புதுச்சேரி பாகூர் பகுதியில் 2 சதுர கி.மீ நிலமும், காரைக்கால் பகுதியில் 39 சதுர கி.மீ நிலமும் இதற்காக கையகப்படுத்த தனியார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த எரிவாயு கிணறுகள் 3500 முதல் 4500 மீட்டர் ஆழம் வரை அமைக்கப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த எரிவாயு கிணறு புதுச்சேரியில் அமையவுள்ள இடங்களான பாகூர், காரைக்கால் பகுதி அதிக மக்கள்தொகை மற்றும் செழிப்பான விவசாய நிலங்களை கொண்ட பகுதியாகும். இந்த எரிவாயு திட்டம் மக்கள் பயன்பாட்டில் உள்ள விவசாயம் மற்றும் வேளாண் நிலங்களை சிதைத்து தனியார் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும். இந்த எரிவாயு கிணறுகளை மக்கள்தொகை அதிகமுள்ள பகுதிகளில் அமைத்து பல வருடங்களாக எரிவாயுவை எடுப்பதின் மூலம் எவ்வளவு ஆபத்து ஏற்படும் என்பதை விளக்க தேவையில்லை. எரிவாயுவை எடுக்க 3500 முதல் 4500 மீட்டர் ஆழம் வரை ஆழ்குழாய் கிணறு அமைக்கும்போது மேற்பரப்பில் உள்ள நிலத்தடி நீர், எரிவாயு உறிஞ்சப்படுவதால் ஏற்படும் வெற்றிடங்களில் சென்று புகுந்து விடும். இதனால் மேல்மட்ட நிலத்தடி நீர் கீழ்மட்டத்திற்கு சென்றுவிடும். மேலும், ஹைட்ரோ கார்பன் கிணறு தோண்டும்போது பெருமளவில் நிலத்தடி நீர் வெளியேற்றப்படும். இதனால் விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்படும். அந்த பகுதி வறட்சியான பகுதியாக மாறிவிடும். புதுச்சேரி பாலைவனமாக மாறிவிடும்.

புதுச்சேரி மாநிலம் விவசாயம், தொழிற்சாலை மற்றும் அனைத்து தேவைகளுக்கும் நிலத்தடி நீரை மட்டுமே சார்ந்து இருப்பதால் இதுபோன்ற திட்டங்கள் நிலத்தடி நீர் மட்டத்திற்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும். ஒவ்வொரு கிணறும் பக்கவாட்டில் பல கிலோ மீட்டர் வரையுள்ள அனைத்து நிலத்தடி நீராதாரங்களையும் உறிஞ்சி எடுத்து நிலப்பகுதிகள் வறட்சி பகுதியாக மாறிவிடும் ஆபத்து உள்ளது. ஆழ்குழாய் எரிவாயு கிணறுகள் அமைக்கும்போது நிலத்தில் பல ஆயிரம் மீட்டர் ஆழத்தில் உள்ள எரிவாயுவை வெளியேற்ற ரசாயன பொருட்கள் கலந்த நீரை குழாய் மூலம் நிலத்தடிக்கு செலுத்தி அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இதனால் நிலத்தடியில் பாறைகள் பிளவுற்று எரிவாயு வெளியேற்றப்படுகிறது. எரிவாயுவுடன் சேர்ந்து விரிசல் ஏற்படுத்துவதற்கு உள்செலுத்திய ரசாயன நீரும் வெளியேறும். பல ஆயிரம் லிட்டர் அளவில் வெளியேறும் இந்த கழிவுநீரால் பெரும் சுற்றுச்சூழல் கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், இந்த ரசாயன கழிவுநீர் நிலத்தடி நீரில் கலக்கும் அபாயமும் உள்ளது. தொடர்ச்சியாக நீரை வெளியேற்றுவதால் புதுச்சேரி, காரைக்கால் போன்ற கடலோர பகுதிகளில் கடல்நீர் அதிக அளவில் உட்புகும் அபாயமும் உள்ளது. இதனால் விளைநிலங்கள் தரிசாகும். எரிவாயு கிணறுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் திடக்கழிவுகளால் கதிரியக்க பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. சுற்றுப்பகுதிகளில் உள்ள மக்களுக்கு இந்த திட்டத்தில் சரும நோய்கள், சுவாச கோளாறுகள், புற்றுநோய் மற்றும் பல்வகையான உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய ஆபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. தொடர்ச்சியாக நீரை செலுத்தி நிலத்தின் ஆழத்தில் உள்ள பாறைகளில் விரிசலை ஏற்படுத்துவதால் பூமிக்கடியில் அசாதாரணமான சூழல் உருவாகும். அதன் விளைவாக பூமிக்கடியில் நிலநடுக்கம், பூமி உள்வாங்குதல் போன்ற பேரிடர்கள் ஏற்படக்கூடும். அமெரிக்காவில் இதுபோன்ற எரிவாயு கிணறுகள் அதிகம் அமைந்துள்ள ஒக்லஹோமா பகுதியில் 2011ம் ஆண்டு முதல் அதிக அளவில் நிலநடுக்கம் ஏற்படுவதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. இது முற்றிலுமாக எரிவாயு உறிஞ்சப்படுவதன் மூலம் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட நிலநடுக்கமாகும். எனவே இந்த திட்டம் புதுச்சேரி மாநிலத்திற்கும், பிற பகுதிகளுக்கும் ஏற்ற திட்டமல்ல. ஏற்கனவே நீர் பற்றாகுறையால் பாதிப்பு அடைந்துள்ள விவசாய நிலங்கள் முழுவதும் தரிசு நிலமாக மாறி விடும். வளர்ச்சி என்ற பெயரில் கொண்டுவரப்படும் இத்தகைய திட்டம் பல ஆயிரம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், மக்களின் வாழ்க்கையையும் சீர்குலைத்து விடும் நிலையில் உள்ளதால் இத்திட்டத்தை புதுச்சேரியில் செயல்படுத்த வேண்டாம் என்று மத்திய அரசை இச்சட்டப்பேரவை கேட்டுக் கொள்கிறது என்ற தீர்மானத்தை முன்மொழிகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.உறுப்பினர்களின் விவாதத்தை தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: