விளம்பர அறிவிக்கை ரத்து எதிரொலி: தேர்தல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி நியமனம்

புதுச்சேரி, ஜூலை 24: மாநில தேர்தல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு ஏற்ப மாநில தேர்தல் ஆணையரை நியமிக்க அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டது. கடந்த ஓராண்டுக்கு முன் துணை நிலை ஆளுநர் கிரண்பேடியின் ஒப்புதலுக்கு கோப்பு அனுப்பப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மாநில தேர்தல் ஆணையரை நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக உள்ளாட்சித்துறை சார்பில் விளம்பரம் வெளியானது. முதல்வருக்கும், உள்ளாட்சி அமைச்சருக்கும் தெரியாமலே அதிகாரிகள் இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.இதுகுறித்து நேற்று முன்தினம் சட்டசபையில் இப்பிரச்னையை காங்கிரஸ், திமுக எம்எல்ஏக்கள் கிளப்பினர். இதற்கு பதிலளித்த உள்ளாட்சி அமைச்சர் நமச்சிவாயம், கவர்னர் தன்னிச்சையாக முடிவு எடுத்து இந்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே மாநில தேர்தல் ஆணையரை நியமிப்பது தொடர்பாக 1994ம் ஆண்டு விதிமுறைகள் இருக்கிறது. இந்த விதிகளின்படி அந்த விளம்பரம் வெளியாகவில்லை. முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும் தெரியாமல் அறிவிக்கை வெளியாகியுள்ளது.இது எம்எல்ஏக்களின் உரிமையை பறிக்கும் செயலாகும். சபாநாயகர் அந்த கோப்பை வரவழைத்து ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இவரை தொடர்ந்து பேசிய முதல்வர் நாராயணசாமி, மாநில தேர்தல் ஆணையராக ஓய்வு பெற்ற அதிகாரி பாலகிருஷ்ணனை நியமிக்க வேண்டுமென கடந்த ஓராண்டுக்கு முன் கோப்பு அனுப்பினோம், ஆனால் கவர்னர் ஏற்க மறுத்து வெளியில் இருந்து நியமனம் செய்ய வேண்டுமென திருப்பி அனுப்பினார். அமைச்சரவை பரிந்துரைத்ததை ஏற்று கிரண்பேடி செயல்படவில்லை. தற்போது யாரோ ஒருவருக்கு சாதகமாக கிரண்பேடி தன்னிச்சையாக விளம்பர அறிவிப்பு கொடுத்துள்ளார். எனவே இதன் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

விவாதத்துக்கு பின்னர் சபாநாயகர் சிவக்கொழுந்து, முதல்வர், அமைச்சருக்கு தெரியாமல் எப்படி விளம்பரம் கொடுக்கலாம். இந்த விவகாரத்தில் சட்ட திட்டங்கள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. பேரவைக்கான உரிமையை தனிநபரோ, அவர் சார்ந்த குழுவோ கையில் எடுத்துக்கொள்ள அனுமதிக்க முடியாது. அமைச்சரவைக்கு தெரியாமலும், அரசிதழில் போடாமல் விதிகளுக்கு எதிராகவும் வெளியிடப்பட்ட உள்ளாட்சி தேர்தல் ஆணையர் தேர்வு விளம்பர அறிவிக்கை ரத்து செய்யப்படுகிறது என அறிவித்தார். இதற்கிடையே நேற்றும் இது தொடர்பாக முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு பேசியதாவது: மாநில தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பாக நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏற்கனவே அமைச்சரவைக்கு தெரியாமல் வெளியிடப்பட்ட தேர்தல் ஆணையரை தேர்வு செய்யும் அறிவிக்கை ரத்து செய்யப்படுகிறது. இதுகுறித்து உள்ளாட்சி அமைச்சர் நமச்சிவாயம்,

இது தொடர்பான ஆணையை உள்ளாட்சித்துறைக்கு முறைப்படி அனுப்பி வைத்துள்ளார். மேலும் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணன் என்பவரை மாநில தேர்தல் ஆணையராக நியமிக்க அமைச்சரவை முடிவு எடுத்தது. அதன்படி இன்று (நேற்று) அவர் அப்பதவியில் பொறுப்பேற்றுக்கொண்டார் என்றார். தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு அதிகாரம் என நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் கிரண்பேடி ஒப்புதல் இல்லாமலே மாநில தேர்தல் ஆணையரை அமைச்சரவை நியமனம் செய்து அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: