மாஞ்சோலை தொழிலாளர்கள் போராட்டத்தில் உயிர்நீத்தோர் நினைவு தினம் தாமிரபரணியில் பல்வேறு கட்சியினர் அஞ்சலி

நெல்லை, ஜூலை 24: மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கடந்த 1999ம் ஆண்டு ஜூலை 23ம் தேதியன்று கூலி உயர்வு கேட்டு நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க ஊர்வலமாக வந்தனர். அப்போது போலீசாருடன் ஏற்பட்ட மோதலையடுத்து நடந்த தடியடியில் 17 பேர் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி இறந்தனர். இதன் நினைவாக ஆண்டு தோறும் ஜூலை 23ம் தேதி பல்வேறு அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியினர் கொக்கிரகுளம் ஆற்றுப்பாலம் அருகே தாமிரபரணி ஆற்றில் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.நேற்று (23ம்தேதி) நினைவுநாளை முன்னிட்டு காலை 9 மணி முதல் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக ஒவ்வொரு கட்சியினர் மற்றும் அமைப்பினருக்கு தனித்தனியாக நேரம் ஒதுக்கப்பட்டது. தாமிரபரணி ஆற்றில் புதிய பாலம் அமைக்கும் பணி நடந்து வருவதால் அஞ்சலி செலுத்த தனி பாதை வசதி ஏற்படுத்தப்பட்டு இருந்தது.காங்கிரஸ், கம்யூனிஸ்ட், புதிய தமிழகம், விடுதலை சிறுத்தைகள், தமமுக, ஆதிதமிழர் பேரவை, ஆதிதமிழர் கட்சி, தமிழ்புலிகள், தமிழர் விடுதலை களம் உள்ளிட்ட 32 அமைப்பினர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி  பிற்பகல் 1 மணிக்கு நெல்லை சந்திப்பில் இருந்து ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்தினார்.மாஞ்சோலை தொழிலாளர்கள் நினைவு தினத்தையொட்டி பல்வேறு அமைப்பினர் அஞ்சலி செலுத்த ஏராளமான வாகனங்களில் நெல்லையில் குவிந்தனர். இதனால் நெல்லை சந்திப்பு, வண்ணார்பேட்டை, கொக்கிரகுளம், முருகன்குறிச்சி, பைபாஸ்ரோடு உள்ளிட்ட இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.      800 போலீஸ் குவிப்பு: அஞ்சலி நிகழ்ச்சியையொட்டி நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கரன் உத்தரவின் பேரில் போலீஸ் துணை கமிஷனர் சரவணன் மேற்பார்வையில் உதவி கமிஷனர்கள் சதீஷ்குமார், கோடிலிங்கம், வடிவேல், திபு ஆகியோர் தலைமையில் 600 போலீசார் மற்றும் 200 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கொக்கிரகுளம் ஆற்றுப்பாலம், வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலம், சந்திப்பு பஸ் நிலைய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும் தாமிரபரணி ஆற்றில் தீயணைப்பு படையினர் ரப்பர் படகுடன் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தனர். இதுதவிர நீச்சல் வீரர்கள் மற்றும் அதிரடிப்படையினரும் தயார் நிலையில் இருந்தனர்.

Related Stories: