கரிவலம்வந்தநல்லூர் அருகே மணல் திருட்டை தடுக்க சென்ற எஸ்ஐக்கு கொலை மிரட்டல்

சங்கரன்கோவில், ஜூலை 24: கரிவலம்வந்தநல்லூர் அருகே மணல் திருட்டை தடுத்த எஸ்ஐக்கு கொலை மிரட்டல் விடுத்த கிராம மக்கள் 15க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து 5 பேரை போலீசார் கைது செய்தனர்.  

கரிவலம்வந்தநல்லூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட செந்தட்டியாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் லேமாஸ் மகன் முத்துசாமி(48). இவர் அங்குள்ள ஓடையில் இருந்து அனுமதியின்றி மாட்டுவண்டியில் மணல் கடத்தி வந்தார். அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்ட கரிவலம்வந்தநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணசாமி மற்றும் போலீசார் தடுத்து உள்ளனர். இதனையறிந்த முத்துசாமியின் உறவினர்கள் மற்றும் அங்கு நடைபெற்று கொண்டிருந்த 100 நாள் வேலைதிட்டத்தில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்டோர் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர்களுக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் மாட்டுவண்டியை எடுத்து செல்லவிடாமலும், முத்துசாமியை அழைத்து செல்லாமலும் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணசாமி கரிவலம்வந்தநல்லூர் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். போலீசார் வந்து முத்துசாமியை பிடித்து விசாரணைக்கு அழைத்து சென்றனர். இதுகுறித்து எஸ்ஐ கொடுத்த புகாரின் பேரில் செந்தட்டியாபுரம் கிராமத்தை சேர்ந்த 15க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் சித்ரகலா விசாரித்து முத்துசாமி, ராஜராஜ் மனைவி பலவேசம், ராமர் மகன் முத்துவாலி, பொன்னையா மனைவி குச்சாம்பாள், முத்துசாமி மனைவி மாரியம்மாள் 5 பேரை கைது செய்தார். மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். அந்த கிராமத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் பதற்றம் நிலவி வருகிறது.

Related Stories: