சொந்த கார்களை வாடகைக்கு விடுவதா? கோவில்பட்டி ஆர்டிஓ அலுவலகம் முற்றுகை

கோவில்பட்டி, ஜூலை 24: சொந்த உபயோகத்திற்கான கார்களை வாடகைக்கு விடுவதை கண்டித்து  வாடகை கார் டிரைவர்களும், உரிமையாளர்களும் கோவில்பட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கோவில்பட்டி, எட்டயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான வாடகை கார்கள்  இயங்கி வருகின்றன. இதற்காக இவர்கள் வாடகை காருக்கான உரிமம் பெற்று  தொழில் நடத்தி வரும் நிலையில் சொந்த உபயோகத்திற்கு வைத்திருக்கும்  கார்களை பெரும்பாலான உரிமையாளர்கள், தங்களது கார்களை வாடகைக்கு விட்டு  வருகின்றனர். இதனால் வாடகை கார் டிரைவர்களும், உரிமையாளர்களின் வருவாய் ஆதாரம் பெரிய அளவில்  பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இவ்வாறு   வருவாய் குறைந்து விட்டதால் வாடகை  கார்களுக்கான சாலை வரி, எம்சி, இன்ஸ்சூரன்ஸ் போன்றவைகளை கட்ட முடியாமல்  இதன் உரிமையாளர்கள், டிரைவர்கள் கடுமையாக அவதிப்படுகின்றனர். இதையடுத்து கோவில்பட்டி பகுதியில் சொந்த கார்களை  வாடகைக்கு விடும் கார் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வாடகை  கார் டிரைவர்களும், உரிமையாளர்களும் கோவில்பட்டி கடலையூர் ரோட்டில்  உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் இதுகுறித்த கோரிக்கை மனுவை மோட்டார் வாகன ஆய்வாளர் நாகூர்கனியிடம் கொடுத்து சென்றனர்..

Related Stories: