கோயம்பேடு மார்க்கெட்டில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பறிமுதல்: கடைக்காரருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் உள்ள கடையில் பதுக்கி வைத்திருந்த ₹4 லட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட கடைக்காரர்களுக்கு ₹50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தமிழகத்தில் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துபவர்களை கண்காணிக்கவும், பறிமுதல் செய்யவும் தனி குழுக்கள் அமைக்கப்பப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சியில் வார்டு அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் அவ்வப்போது ஆய்வு நடத்தி பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து வருகிறது. இந்நிலையில் கோயம்பேடு மார்க்கெட் முதன்மை நிர்வாக அலுவலர் கோவிந்தராஜன் தலைமையிலான அதிகாரிகள், கோயம்பேடு மார்க்கெட் தானிய மற்றும் உணவுக்கிடங்கு பகுதியில் இயங்கி வரும் கடைகளில் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள ஒரு கடையில் சுமார் ஒரு டன் எடையுள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப்புகள், கவர்கள், ஸ்பூன்கள் உள்ளிட்டவை இருப்பது தெரிந்தது. ₹4 லட்சம் மதிப்புள்ள அந்த பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சம்மந்தப்பட்ட கடைக்காரருக்கு ₹50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதுகுறித்து முதன்மை நிர்வாக அலுவலர் கோவிந்தராஜன்  கூறுகையில், ‘‘கோயம்பேடு காய்கறி, பழங்கள், பூ மார்கெட்  பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என அவ்வப்போது ஆய்வு செய்யப்படுகிறது. அப்போது, பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருக்கும் கடை உரிமையாளர்கள் மட்டுமின்றி வாடிக்கையாளர்களுக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது. தொடர்ந்து 3 முறைக்கு மேல் சிக்கும் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும். தற்போது, பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும்,’’ என்றார்.

Related Stories: