அக்.2ம் தேதிக்குள் மதுக்கடைகளை மூட வேண்டும்: தமிழக அரசுக்கு குமரிஅனந்தன் வலியுறுத்தல்

சென்னை: அக்டோபர் 2ம் தேதிக்குள் அனைத்து மதுக்கடைகளையும் தமிழக அரசு மூட வேண்டும் என்று குமரி அனந்தன் வலியுறுத்தியுள்ளார்.  இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: அனைத்து மதத்தினரும் சாதி, மத பேதமின்றி அர்ச்சகர் இன்றி தாமே வழிபடும் வகையில் பாரத மாதா கோயில் அமைக்க வேண்டும் என்று கூறிக் கொண்டே சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவா உயிர் நீத்தார். அவரது எண்ணம் ஈடேறும் வகையில் அதற்கான பணியை தமிழக அரசு தொடங்கியுள்ளது. அதேபோன்று காந்தியை பின்பற்றி பூரண மதுவிலக்கை இந்தியா முழுவதும் அமல்படுத்தி மதுவில்லா சமுதாயத்தை உருவாக்க உறுதி பூண்டுள்ளோம். எனவே, காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதிக்குள் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

அதற்காக யாத்திரை ஒன்றையும் மேற்கொள்கிறோம். தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்திய தலைவர்களின் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தும் யாத்திரையை மேற்கொள்கிறோம். 26ம்தேதி தொடங்கி அடுத்த மாதம் 25ம்தேதி இந்த யாத்திரை முடிவடைகிறது. இறுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து இந்த கோரிக்கையை வலியுறுத்த உள்ளோம். அவர்களை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். அப்போது பூரண மதுவிலக்கை தமிழகத்தில் கொண்டு வர வலியுறுத்துவோம்.  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: