கழிவுநீர் தேக்கம், சிதிலமடைந்த சாலையை சீரமைக்காத மாநகராட்சி அதிகாரிகள் மீது பொதுமக்கள் போலீசில் புகார்

பெரம்பூர்: கொருக்குப்பேட்டை பகுதியில் கழிவுநீர் தேக்கம், சிதிலமடைந்த சாலையை சீரமைக்காத மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி பொதுமக்கள் போலீசில் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மாநகராட்சி 4வது மண்டலம், 41வது வார்டுக்கு உட்பட்ட கொருக்குப்பேட்டை சுண்ணாம்பு கால்வாய்  கருமாரியம்மன் நகர் பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 3 வருடங்களுக்கு மேலாக சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.  மேலும், பாதாள சாக்கடை அடைப்பால் ஆங்காங்கே கழிவுநீர் வெளியேறி சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி அதிகரித்து, இப்பகுதி மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதுபற்றி அப்பகுதி மக்கள் பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும், இதுவரை நடவடிக்கை இல்லை. இதனை கண்டித்து பலமுறை  சாலை மறியல் போராட்டம் நடத்தியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று கருமாரியம்மன் நகரில் இருந்து ஆர்.கே.நகர் காவல் நிலையம் வரை ஊர்வலமாக சென்று, இன்ஸ்பெக்டரிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில், எங்கள் பகுதியில் பல ஆண்டாக சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. பாதாள சாக்கடை அடைப்பால் கழிவுநீர் வெளியேறி குடியிருப்பு பகுதியில் தேங்குகிறது. இதனால், நோய் பாதிப்பில் தவித்து வருகிறோம். இதுபற்றி பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, பொதுமக்களின் புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் மெத்தன போக்குடன் செயல்படும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்து இருந்தனர்.

Related Stories: