திமுக பொருளாளர் துரைமுருகன் பேட்டி தண்ணீர் தரக்கூடாது என்று அண்டை மாநில முதல்வர்கள் கவனமாக உள்ளனர்

வேலூர், ஜூலை 24: பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவது குறித்து திமுக பொருளாளர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது: ஆந்திராவில் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை. செயல்பாடுகளில் சந்திரபாபுவை மிஞ்சியவராக ஜெகன் மோகன் இருக்கிறார். பாலாற்றில் ஒரு சொட்டு தண்ணீர் விடமாட்டோம் என்ற வைராக்கியத்தோடு தான், ஆட்சிகள் மாறினாலும் முதல்வர்கள் தங்கள் கொள்கையில் மாறவில்லை. தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாது என்பதில் அண்டை மாநில முதல்வர்கள் மிக கவனமாக உள்ளார்கள். எல்லா பக்கமும் முட்டுக்கட்டை போடுகிறார்கள். இந்த முட்டுக்கட்டையை உடைக்க தெரியாமல் எடப்பாடி அரசு அமர்ந்துள்ளது.

பொதுப்பணித்துறையும், நெடுஞ்சாலை துறையும் முதல்வரிடம் இருக்கக்கூடாது. இதுவரையில் எடப்பாடி பழனிச்சாமி எந்த அணையையாவது போய் சுற்றி பார்த்தார் என்று செய்தி உள்ளதா? பொதுப்பணித்துறை அமைச்சர்கள் வேறுமாநில நீர்பாசன அமைச்சர்களை நேரில் போய் பார்க்க வேண்டும். முதல்வரிடம் அது இருப்பதால் சங்கடங்கள் ஏற்படும். இந்த அரசு இன்னும் கொஞ்ச நாள் இருந்தால் தமிழகத்தின் உரிமைகள் பறிபோய்விடும் சூழல் உள்ளது. வேலூர் மக்களவை தொகுதியில் 30 அமைச்சர்கள் மையம் கொண்டிருப்பது அவர்களின் பலவீனத்தையும், நாங்கள் எவ்வளவு பலத்தோடு இருக்கிறோம் என்பதையும் காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: