அதிமுகவின் மானத்தை காக்க வெற்றி பெற வேண்டும் ஆட்சி துண்டு போன்றது, கட்சி வேஷ்டி போன்றது, வேஷ்டி போய்விட்டால் அவமானம்

வேலூர், ஜூலை 24: ஆட்சி என்பது துண்டு போன்றது, கட்சி என்பது வேஷ்டி போன்றது. வேஷ்டி போய்விட்டால் அவமானம். அதிமுகவின் மானத்தை காக்க தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று வேலூர் மக்களவை தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் எம்பி வைத்தியலிங்கம் பேசினார். வேலூர் மக்களவை தேர்தல் தொடர்பாக அதிமுக ஆலோசனை கூட்டம் வேலூரில் நேற்று நடந்தது. அதிமுக கூட்டணி கட்சியான புதிய நீதிக்கட்சி நிறுவனர் மற்றும் தலைவரும் வேலூர் மக்களவை தொகுதி வேட்பாளருமான ஏ.சி.சண்முகம், அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நீலோபர்கபில், ஜெயக்குமார், மதுசூதனன், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, எஸ்பி வேலுமணி, விஜயபாஸ்கர், மாபா பாண்டியராஜன், சி.வி.சண்முகம் உட்பட 30 அமைச்சர்கள், எம்பிக்கள் வைத்தியலிங்கம், வைகைச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

அப்போது அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது: கடந்த தேர்தலை காட்டிலும் தற்போது மக்களும் தொண்டர்களும், அதிமுகவின் வெற்றிக்கு அதிக ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். ஆம்பூர், குடியாத்தம், வாணியம்பாடி தொகுதிகளில் உள்ள சிறுபான்மை மக்கள் வாக்களிப்பதாக உறுதியளித்துள்ளனர். இந்த தேர்தல் வெற்றி மானப்பிரச்னையாக உள்ளது. கட்சியின் எதிர்காலமே இந்த தேர்தலில்தான் அடங்கியுள்ளது. எனவே வேலூர் தொகுதியில் ஏ.சி.சண்முகம் வெற்றிக்கு அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடவேண்டும். இவ்வாறு பேசினார். இதையடுத்து அதிமுக எம்பி வைத்தியலிங்கம் பேசியதாவது: கடந்த மக்களவை தேர்தலில் வேலூர் தொகுதியில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டு மீண்டும் தேர்தல் வரும் 5ம் தேதி நடைபெற உள்ளது. அண்ணா கூறினார், எப்போதுமே தோல்விக்கு பிறகு ஒரு கட்சியில் எழுச்சி ஏற்படும் என்று. அந்த எழுச்சியை நிரூபித்து காட்டக்கூடிய தேர்தல் தான் இந்த தேர்தல்.

ஆட்சி என்பது துண்டு போன்றது, கட்சி என்பது வேஷ்டி போன்றது. வேஷ்டி போய்விட்டால் அவமானம். கட்சி இருந்தால் துண்டை பெற்றுக்கொள்ளலாம். இது எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டிக்காத்த இயக்கம், எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது என்பதை நிரூபிக்க கூடிய தேர்தலாக இந்த தேர்தல் இருக்க வேண்டும். இதில் நாம் வீழ்ச்சியுற்றால் கேள்விக்குறியாகிவிடுவோம். நாம் கேள்விக்குறியல்ல, பிறருக்கெல்லாம் ஆச்சரியக்குறி என்பதை நிரூபிக்க சுறு சுறுப்பாக, விறுவிறுப்பாக பணியாற்ற வேண்டும். அதிமுக வேஷ்டியை கட்டிக்கொண்டு வெளியே வரக்கூடிய நம் கட்சிக்காரர்கள், நம் மானத்தை காக்கும் தேர்தல் என்பதை மனதில் வைத்து, கட்சி பணியாற்றி வெற்றி பெற்று நிரூபிக்க வேண்டும்’ இவ்வாறு அவர் பேசினார்.

அதிமுக கூட்டணி கட்சியான புதிய நீதிக் கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் பேசுகையில், ‘தாய் வீட்டு சீதனமாக எனக்கு இந்த இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளது. கடந்த முறை ஜெயலலிதா தனித்து 37 இடங்களில் வெற்றி பெற்றார். அதுபோலவே, இம்முறை வேலூரில் தனியாக தேர்தல் நடந்தாலும் அதிமுக கூட்டணியே வெற்றிபெறும். வேலூர் மக்கள் பொய் வாக்குறுதிகளை நம்ப மாட்டார்கள். இந்த தேர்தல் திருப்புமுனையாக அமையும். மத்தியில் நிலையான ஆட்சியும், மாநிலத்தில் வலுவான ஆட்சியும் அமைந்துள்ளது இவ்வாறு பேசினார்.முன்னதாக தமாகா மத்திய மாவட்ட தலைவர் பி.எஸ்.பழனி உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர். இதில் புதிய நீதி கட்சி செயல் தலைவர் ரவிக்குமார், அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மேற்கு மாவட்ட செயலாளர் ஜனனி சதிஷ்குமார், மாவட்ட பொருளாளர் மூர்த்தி, அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: